இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். அதற்கு நிகராக கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்ட அவர் இந்தியாவின் ஒரே வெற்றிகளில் பங்காற்றினார். 2014இல் தோனி ஓய்வு பெற்ற போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 7வது இடத்தில் தடுமாறியது. அப்போது கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி 2016 – 2021 வரை இந்தியாவை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார்.
தம்முடைய ஆக்ரோஷமான அணுகுமுறையால் எதிரணிகளை தெறிக்க விட்ட அவருடைய தலைமையில் இந்தியா மொத்தம் 68 போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக அவரது தலைமையில் இந்தியா தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அதனால் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய கேப்டனாக விராட் கோலி சாதனை படைத்தார்.
ஆதரவாக நின்ற கோச்:
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தாம் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மிகப்பெரிய ஆதரவாக இருந்ததாக விராட் கோலி கூறியுள்ளார். இது பற்றி லண்டனில் ஒரு பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் ஒருவேளை ரவி சாஸ்திரியுடன் நான் இணைந்து வேலை செய்யாமல் போயிருந்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெற்ற வெற்றிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கலாம்”
“எங்களுக்கிடையே இருந்த தெளிவை மற்றவர்களிடம் கண்டறிவது மிகவும் கடினமானது. கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு தங்களுடைய கேரியரை வளர வைப்பதே அனைத்துமாக இருக்கும். செய்தியாளர்கள் சந்திப்பில் எனக்காக ரவி சாஸ்திரி தோட்டாக்களைப் போன்ற கேள்விகளை எதிர்கொண்டு ஆதரவு கொடுத்தார்”
விராட் கோலி நெகிழ்ச்சி:
“அவர் இல்லாமல் இருந்திருந்தால் விஷயங்கள் வித்தியாசமாக இருந்திருக்கும். எனவே அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. என்னுடைய கிரிக்கெட்டின் பயணத்தில் அவருடைய பங்கு மிகப்பெரியது” என்று கூறினார். முன்னதாக ரவி சாஸ்திரி இருந்த வரை விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக ராஜாங்கம் நடத்தி வந்தார்.
இதையும் படிங்க: இந்திய அணிக்கு எதிராக முதல் சர்வதேச வீரராக ஜோ ரூட் நிகழ்த்திய வரலாற்று சாதனை – விவரம் இதோ
ஆனால் 2021 டி20 உலகக் கோப்பையுடன் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் பதவியிலிருந்து விடை பெற்றார். அந்தத் தொடருடன் டி20 கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். அப்போது அவரிடம் இருந்த ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை பிசிசிஐ வலுக்கட்டாயமாக பறித்தது. அதனால் ஏமாற்றமடைந்த விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியையும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.



