
சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. அதில் சொந்த மண்ணில் வலுவான கிரிக்கெட் அணியாக திகழும் இந்தியா நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளை தோற்கடித்து 2011 போலவே கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துவதற்கு போராட உள்ளது. அதே போல அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வென்று இதுவரை போட்டு வரும் வெற்றி நடையை இந்தியா தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
ஏனெனில் 1992 முதல் கடந்த 30 வருடங்களில் இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைகளில் 7 முறை பாகிஸ்தானை சந்தித்துள்ள இந்தியா அதில் ஒன்றில் கூட தோற்காமல் 7 போட்டிகளிலும் என்று அசத்தி வருகிறது. அதன் காரணமாக கடந்த காலத்தைப் போலவே உலகக்கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை எப்படியாவது இம்முறை இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து தொடர் தோல்விகளுக்கு மாஸ் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே பாகிஸ்தான் ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பாகவும் விருப்பமாகவும் இருக்கிறது.
அப்ரிடியின் சவால்:
அதற்கேற்றார் போல் கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் 2021 டி20 உலக கோப்பையில் முதல் முறையாக வென்று கடந்த ஆசியக் கோப்பையிலும் வெற்றி வாகை சூடியது. அந்த வகையில் சமீப காலங்களில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் கை ஓங்கியுள்ளதால் இம்முறை தங்களுடைய அணி நிச்சயமாக வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அந்நாட்டு முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் முதலில் இந்தியாவுக்கு எதிராக மட்டும் வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தை பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் விட வேண்டும் என்று நட்சத்திர வீரர் ஷாஹீன் அப்ரிடி கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வெல்வதை விட அவர்களுடைய மண்ணில் உலகக் கோப்பையை வெல்வதே தங்களுடைய லட்சியமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் 2021 டி20 உலக கோப்பையில் இந்தியாவை தோற்கடிப்பதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற அவர் சமீப காலங்களில் சந்தித்த காயத்திலிருந்து தற்போது முழுமையாக குணமடைந்து இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 ப்ளாஸ்ட் தொடரில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை சாய்த்து உலக சாதனை படைத்தார்.
அந்த வகையில் தற்போது முழுமையாக குணமடைந்து ஃபிட்டாகி அடுத்ததாக நடைபெறும் இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாட தேர்வாகியுள்ள அவர் இந்தியா மட்டுமின்றி இதர அணிகளையும் தோற்கடித்து இந்த உலகக் கோப்பையை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி பிரபல பாகிஸ்தான் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் நாம் உலகக் கோப்பை என்பதே இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டி என்று நினைப்பதை மொத்தமாக நிறுத்த வேண்டும். ஏனெனில் அது வெறும் ஒரு போட்டியாகும்”
“எனவே அதை மறந்து விட்டு ஒரு அணியாக இணைந்து எப்படி இந்த உலகக் கோப்பையை வெல்லலாம் என்பதே நம்முடைய லட்சியமாக இருக்க வேண்டும். மேலும் தற்போது நான் முழுமையாக குணமடைந்துள்ள காரணத்தாலேயே டெஸ்ட் அணியில் தேர்வாகியுள்ளேன். ஒருவேளை நான் முழுமையாக ஃபிட்டாக இல்லாமல் இருந்தால் என்னுடைய பெயர் டெஸ்ட் அணியில் இருந்திருக்காது. ஏனெனில் நான் பாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடுகிறேன். கிளப் அணிக்காக விளையாடவில்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க:வெ.இ தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் இடம்பெற்று டி 20 தொடரில் ஓய்வு வழங்கப்படுள்ள – 4 வீரர்கள் யார் யார் தெரியுமா?
முன்னதாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளைப் போல் அல்லாமல் கடந்த 10 வருடமாக ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடாமல் இருந்து வருகின்றனர். அதன் காரணமாக தற்போதுள்ள பாபர் அசாம் தலைமையிலான அனைத்து வீரர்களுக்கும் இந்த உலகக்கோப்பை நடைபெறும் இந்தியாவின் கால சூழ்நிலைகள் புதிதாக சவாலை கொடுக்க காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.