உலக ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 4ஆம் தேதி பெங்களூரு நகரில் நடைபெற்ற 35வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியில் செமி ஃபைனல் சுற்றுக்கு செல்ல இரு அணிகளுமே வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் தாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
ஆனால் அதற்கேற்றார் போல் பந்து வீச்சில் அசத்த தவறிய அந்த அணியை அடித்து நொறுக்கிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 401/6 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டிலும் உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து நியூசிலாந்து சாதனையும் படைத்தது.
மோசமான சாதனை:
நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக இளம் துவக்க வீரர் ரச்சின் ரவீந்தரா சதமடித்து 108 ரன்கள் குவித்து அறிமுக உலகக் கோப்பையில் 3 சதங்கள் அடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்தார். அவருடன் கேப்டன் கேன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 95 ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் மார்க் சாப்மேன் 39, டார்ல் மிட்சேல் 29, கிளன் பிலிப்ஸ் 41, மிட்சேல் சான்ட்னர் 26* ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர்.
மறுபுறம் பந்து வீச்சில் சொதப்பிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது வாசிம் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹாரிஸ் ரவூப் 10 ஓவரில் ஒரு விக்கெட் மட்டும் எடுத்து 85 ரன்கள் வாரி வழங்கினார். குறிப்பாக 150 கி.மீ வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விடுவார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய அவர் ரச்சின் ரவீந்திர போன்ற 23 வயது இளம் வீரரிடம் சரமாரியான அடி வாங்கினார்.
சொல்லப்போனால் இதன் வாயிலாக ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்களை கொடுத்து மோசமான பவுலிங்கை பதிவு செய்த பாகிஸ்தான் பவுலர் என்ற சாதனையை அவர் மதியம் 2.21 மணிக்கு படைத்தார். ஆனால் அவரை மிஞ்சும் அளவுக்கு மறுபுறம் 24 போட்டிகளுக்கு பின் முதல் முறையாக ஒரு விக்கெட்டை கூட எடுக்காமல் மோசமாக பந்து வீசிய ஷாஹீன் அஃப்ரிடி 10 ஓவரில் 90 ரன்களை வாரி வழங்கி அந்த சாதனையை மதியம் 2.38 மணிக்கு உடைத்தார்.
இதையும் படிங்க: 1 லட்சம் ரன்ஸ் அடிச்சாலும் அது இருக்கும்.. விராட் கோலி ரசிகர்களுக்கு சோயப் மாலிக் பதிலடி.. நடந்தது என்ன?
குறிப்பாக புதிய பந்தை ஸ்விங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை ஓட விடுவார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய அவர் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் இந்த அவமான சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ஷாஹீன் அஃப்ரிடி : 90/0, நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூரு, 2023*
2. ஹரிஷ் ரவூப் : 1/85, நியூசிலாந்துக்கு எதிராக, பெங்களூரு, 2023*
3. ஹசன் அலி : 1/84, இந்தியாவுக்கு எதிராக, மான்செஸ்டர், 2019