இனிமேலும் சான்ஸ் கிடைக்காது.. அவங்களாச்சும் நல்லாருக்கட்டும்.. 34 வயதில் ஓய்வை அறிவித்த இந்திய வீரர்

Shahbaz Nadeem
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக விளையாடும் இந்தியாவுக்காக விளையாடுவது மிகவும் சவால் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதிகப்படியான போட்டி நிலவுவதால் அங்கே அறிமுகமாகும் அனைத்து வீரர்களும் தொடர்ச்சியாக வாய்ப்புகளைப் பெற்று அசத்த முடிவதில்லை. அதன் காரணமாக எத்தனையோ வீரர்கள் தங்களுடைய அறிமுக போட்டியுடன் மறு வாய்ப்பு பெறாமல் கழற்றி விடப்பட்டு காணாமல் போனதை வரலாற்றில் பார்த்துள்ளோம்.

அதற்கு லேட்டஸ்ட் எடுத்துக்காட்டாக சபாஷ் நதீம் அமைந்துள்ளார். முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனியின் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடிய அவர் உள்ளூர் முதல் தரப் போட்டிகளில் 542 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதன் காரணமாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் கடந்த 2019ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடந்த 3வது போட்டியில் அவருக்கு அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

34 வயதில் ஓய்வு:
அந்தப் போட்டியில் சுழல் பந்து வீச்சாளராக 4 விக்கெட்டுகள் எடுத்து சிறப்பாக விளையாடிய அவர் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக 2021ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடி 4 விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் அதன் பின் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் போன்ற முதன்மை ஸ்பின்னர்கள் இருந்ததால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் பெற்று வராமல் தவித்து வந்த அவர் இனியும் வாய்ப்பு கிடைக்காது என்று கருதி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இத்தனைக்கும் 34 வயது மட்டுமே நிரம்பிய அவர் இனிமேலும் வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்து இளம் வீரர்களுக்கு வழி விட்டு நகர்வதாக கூறியுள்ளார். அதே சமயம் வாய்ப்பு கிடைக்கும் அனைத்து வகையான டி20 தொடர்களிலும் விளையாட உள்ளதாக தெரிவிக்கும் சபாஷ் நதீம் இது பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “என்னுடைய ஓய்வு பற்றி நீண்ட காலத்திற்கு முன்பே முடிவெடுத்தேன். தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்துள்ளேன்”

- Advertisement -

“உங்களுக்கு ஏதாவது உத்வேகம் இருந்தால் நீங்கள் அதைப் பின்பற்றி சிறப்பாக செயல்பட ஊக்குவிக்க வேண்டும் என்று நான் எப்போதும் உணர்ந்தேன். இருப்பினும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்பது எனக்கு தெரியும். எனவே இளம் வீரர்களுக்கு வழி விடுவது நல்ல வழியாகும். தற்போது உலகம் முழுவதிலும் நடைபெற உள்ள டி20 தொடர்களில் விளையாடுவதற்கு நான் திட்டமிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தரம்சாலா குளிரா இருக்கும்.. குல்தீப்பை ட்ராப் பண்ணி அவரை இறக்குங்க.. சஞ்சய் பங்கார் பரிந்துரைத்த 2 மாற்றம்

மேலும் வாய்ப்பும் ஆதரவும் கொடுத்த பிசிசிஐ, இந்திய அணி நிர்வாகம், சக வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் லிஸ்ட் ஏ, முதல் தரம் மற்றும் டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 842 விக்கெட்டுகள் எடுத்தும் இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காததால் ஓய்வு பெறுவதாக சபாஷ் நதீம் உருக்கத்துடன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement