தரம்சாலா குளிரா இருக்கும்.. குல்தீப்பை ட்ராப் பண்ணி அவரை இறக்குங்க.. சஞ்சய் பங்கார் பரிந்துரைத்த 2 மாற்றம்

Sanjay Bangar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5வது டெஸ்ட் போட்டி மார்ச் 7ஆம் தேதி தர்மசாலா நகரில் துவங்குகிறது. அதில் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100வது போட்டியில் களமிறங்கி சாதனை படைக்க உள்ளது தமிழக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரை 4 போட்டிகளின் முடிவிலேயே 3 – 1* என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

எனவே இந்த சம்பிரதாய கடைசிப் போட்டியில் இந்தியா தங்களுடைய பிளேயிங் லெவனில் சில மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த தொடரில் அறிமுகமாகி இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்காத ரஜத் படிடார் கடைசி போட்டியில் நீக்கப்படுவார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

2 மாற்றங்கள்:
மேலும் ஏற்கனவே இந்த தொடரில் சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் ஆகிய 2 இளம் வீரர்கள் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்கள். அந்த வரிசையில் கடைசிப் போட்டியில் தேவ்தூத் படிக்கல் அறிமுகமாக களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் கடைசிப் போட்டி நடைபெறும் தரம்சாலா மைதானத்தில் மிகவும் குளிர்ந்த வானிலை நிலவும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.

எனவே அங்கு 3 வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடுவது வெற்றிக்கு அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் குல்தீப் யாதவை நீக்கி விட்டு ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். மேலும் ரஜத் படிடாருக்கு பதிலாக தேவ்தூத் படிக்கல் விளையாடுவது சிறந்த தேர்வாக இருக்கும் என்றும் சஞ்சய் பங்கார் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “தரம்சாலா மைதானம் அமைந்துள்ள உயரம் காரணமாக அங்கு சற்று குளிர்ச்சியாகவும் வேகத்திற்கான அசைவும் இருக்கும். அதன் காரணமாக பிளேயிங் லெவனில் சில மாற்றம் இருக்கலாம். குறிப்பாக குல்தீப் யாதவுக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பலாம்”

இதையும் படிங்க: அந்த சவாலை சந்திக்கும் அஸ்வினோட அருமை இப்போ தெரியாது.. அந்த சாதனையும் உடைக்கணும்.. வாழ்த்திய கும்ப்ளே

“எனவே பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா விளையாடும். அதே போல 3 போட்டிகளில் தொடர்ந்து ரஜத் படிடார் ரன்கள் அடிக்கவில்லை. அதனால் கடைசிப் போட்டியில் அறிமுக வீரரை பார்க்க வாய்ப்புள்ளது. குறிப்பாக தேவ்தூத் படிக்கலுக்கு இந்திய அணி வாய்ப்பு கொடுக்கலாம். அந்த வகையில் இதுவே என்னைப் பொறுத்த வரை இந்த போட்டிக்கு தேவையான 2 மாற்றங்களாகும்” என்று கூறினார்.

Advertisement