
ஐசிசி 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று இந்தியா சாதனை படைத்தது. நவி மும்பையில் நேற்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 299 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87, ஸ்மிருதி மந்தனா 45, தீப்தி சர்மா 58, ரிச்சா கோஸ் 34 ரன்கள் அடித்து அசத்தினார்கள். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் லாரா 101 ரன்கள் அடித்துப் போராடியும் ஏனைய வீராங்கனைகள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதனால் தென்னாப்பிரிக்காவை 246க்கு சுருட்டிய இந்தியா மகளிர் கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது.
இந்திய அணிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 5, சபாலி வர்மா 2 விக்கெட்டுகளை எடுத்தார். முன்னதாக அறிமுகமான காலங்களில் அதிரடியாக விளையாடிய ஷபாலி வர்மா லேடி சேவாக் என்று நிறைய ரசிகர்களிடம் பாராட்டுகளை வாங்கினார். இருப்பினும் சமீபத்திய வருடங்களில் தடுமாற்றமாக விளையாடிய அவரை இந்திய அணி உலகக் கோப்பையிலிருந்து கழற்றி விட்டது.
அவருக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிகா ராவல் சதத்தை அடித்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில் கடைசியில் லீக் போட்டியில் காயமடைந்து வெளியேறினார். அதன் காரணமாக உள்ளூரில் நல்ல ரன்கள் குவித்து போராடி வந்த ஷபாலி வர்மாவுக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் செமி ஃபைனலில் 10 மட்டுமே எடுத்த அவர் இறுதிப் போட்டியில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 87 ரன்களை விளாசி அசத்தினார்.
அதை விட 114/2 என்ற வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா இருந்த போது பகுதி நேர பவுலரான அவர் சுனே லஸ், மாரிசன் காப் ஆகிய 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார். அதுவே திருப்பு முனையை உண்டாக்கி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. பொதுவாக இறுதிப்போட்டிகளில் முக்கிய விக்கெட்டை எடுக்கும் பகுதி நேர பவுலர்களை தங்கக்கை (கோல்டன் ஆர்ம்) பவுலர்கள் என்று வர்ணனையாளர்கள் வர்ணிப்பார்கள்.
இதையும் படிங்க: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேறும் சஞ்சு சாம்சன் செல்லப்போகும் அணி இதுதான் – விவரம் இதோ
அதற்கு எடுத்துக்காட்டாக விளையாடிய ஷபாலி வர்மா ஃபைனலில் ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார். அதன் வாயிலாக ஒரு ஐசிசி மகளிர் உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் இளம் வயதில் (21 வருடம் 279 நாட்கள்) ஆட்டநாயகி விருது வென்ற வீராங்கனை என்ற உலக சாதனையை ஷபாலி படைத்துள்ளார். அத்துடன் ஐசிசி மகளிர் உலகக்கோப்பை இறுதி போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் (87) அடித்த இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2017 உலகக்கோப்பை ஃபைனலில் பூனம் ரௌத் 86 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.