வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணியினர் அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகின்றனர். அதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற இந்தியா ஜூலை 11ஆம் தேதி டாக்காவில் நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 33 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஸ்மிருதி மந்தனா 13 (13) ரன்களிலும் ஷபாலி வர்மா 19 (14) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால் அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்ற ஜெமிமா ரோட்ரிகஸ் 8 (21) யாஸ்டிக்கா பாட்டியா 11 (13) ஹர்லீன் தியோல் 6 (21) என முக்கிய வீராங்கனைகள் அனைவரும் வங்கதேசத்தின் தரமான பந்து வீச்சில் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி குறைந்த ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதனால் 100 ரன்களை கூடாத தாண்டாத இந்தியா 20 ஓவர்களில் 95/8 ரன்கள் மட்டுமே எடுத்து வங்கதேசத்துக்கு எதிராக தன்னுடைய குறைந்த டி20 ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. இதற்கு முன் 2014இல் 101/1 ரன்கள் எடுத்ததே முந்தைய ஸ்கோராகும்.
இந்தியா மேஜிக் வெற்றி:
வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சுல்தானா காட்டூன் 3 விக்கெட்டுகளையும் பஹிமா காட்டூன் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதை தொடர்ந்து 96 ரன்களை எளிதாக துரத்தி இத்தொடரை சமன் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட வங்கதேசத்திற்கு ஆரம்பத்திலேயே சுல்தானா 5 (4) ரன்களில் அவுட்டானதை போலவே மற்றொரு தொடக்க வீராங்கனை சதி ராணியும் 5 (6) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த முர்ஷிதா காட்டூன் 4 (15) ரன்களில் நடையை கட்டினார். அதனால் ஆரம்பத்திலேயே சரிந்த தங்களுடைய அணியை கேப்டன் சுல்தானா நங்கூரமாக நின்று காப்பாற்ற போராடிய போதிலும் எதிர்ப்புறம் மோனி 4 (6) அக்தர் 7 (17) என முக்கிய வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.
ஆனாலும் இலக்கு குறைவாக இருந்த காரணத்தால் வெற்றியின் நெருங்கிய வங்கதேசத்துக்கு 19வது ஓவரில் கேப்டன் சுல்தானா 38 (55) ரன்களில் அவுட்டானது பெரிய பின்னடைவாக அமைந்தது. அதனால் கடைசி ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தது. அப்போது அதற்கு முந்தைய ஓவரை நம்பிக்கை நட்சத்திரம் தீப்தி சர்மா வீசியிருந்ததால் கடைசி ஓவரை பகுதி நேர பவுலரான ஷபாலி வர்மாவிடம் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கொடுத்தார். அதில் முதல் பந்தை எதிர்கொண்ட நஹிதா அக்தர் 2 ரன்கள் எடுக்க முயற்சித்த போது எதிர்ப்புறம் இருந்த ரபேயா காட்டூன் 0 ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார்.
ஆனால் அடுத்த பந்தை எதிர்கொண்ட நகிதா அக்தர் அதிரடியாக ரன்களை எடுக்க முயற்சித்து 6 (12) ரன்களில் அவுட்டாகி செல்ல அடுத்து வந்த ஃபஹீமா கார்டூன் 3வது பந்தில் ரன்கள் எதுவும் எடுக்காமல் 4வது பந்தில் ஷபாலியிடமே கேட்ச் கொடுத்து 0 ரன்களில் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினார். அந்த நிலையில் வந்த மருஃபா அக்தர் 5வது பந்தில் ரன் எடுக்காத நிலையில் கடைசி பந்தில் இறங்கி அடிக்க முயற்சித்து ஸ்டம்பிங்கானதால் இந்தியா வெறும் 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அதனால் டி20 கிரிக்கெட்டில் 2வது குறைந்தபட்ச ஸ்கோரை (95) வெற்றிகரமாக கட்டுப்படுத்தி இந்தியா சாதனை வெற்றியும் பெற்றது. குறிப்பாக கடைசி ஓவரில் வெறும் 1 ரன் மட்டும் கொடுத்த ஷபாலி வர்மா 3 விக்கெட்கள் சாய்த்து 1 ரன் அவுட்டையும் செய்து இந்தியாவுக்கு மேஜிக் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். பொதுவாக பேட்டிங்கில் ஓப்பனிங் வீராங்கனையாக அதிரடியாக விளையாடி லேடி சேவாக் என்று ரசிகர்களிடம் பெயர் பெற்ற அவர் இந்த போட்டியில் பகுதிநேர பவுலராக 3 ஓவரில் 15 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
இதையும் படிங்க:IND vs WI : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விராட் கோலி – படைக்க காத்திருக்கும் 3 உலக சாதனைகள், லிஸ்ட் இதோ
இருப்பினும் இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 12 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் முக்கியமான 10 (14) ரன்களையும் எடுத்த தீப்தி சர்மா ஆட்ட நாயகி விருதை வென்றார். இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் கடைசி சம்பிரதாய போட்டி வரும் ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது.