
இந்தியாவில் துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக கில், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரது தலைமையில் 4 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேல் ராகுல், ஜடேஜா, ஜெயஸ்வால், ரியான் பராக் போன்ற ஏராளமான சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் அந்த அணிகளில் ஒரு கட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரர்களாக இருந்தவர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர். அவர்களைப் பற்றி பார்ப்போம்:
1. செட்டேஸ்வர் புஜாரா: 2011 முதல் இந்திய டெஸ்ட் அணியின் முதுகெலும்பு பேட்ஸ்மேனாக செயல்பட்டு வந்த இவர் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
இருப்பினும் சமீபத்திய வருடங்களில் சுமாராக செயல்பட்டதால் கடந்த இங்கிலாந்து தொடரில் புஜாரா கழற்றி விடப்பட்டார். அத்துடன் சர்பார்ஸ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்த தேர்வுக்குழு தற்போது துலீப் கோப்பையில் கூட புஜாராவை தேர்ந்தெடுக்கவில்லை. அதனால் அவருடைய கேரியர் முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது.
2. அஜிங்க்ய ரஹானே: புஜாராவை போலவே 2011க்குப்பின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய ரஹானே தலைமையில் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வென்றது. ஆனால் அந்தத் தொடருக்கு பின் சதமடிக்க முடியாமல் தடுமாறிய அவரை பிசிசிஐ கழற்றி விட்டது.
இருப்பினும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் போராடி கம்பேக் கொடுத்த அவர் அந்த வாய்ப்பை தக்க வைக்கும் அளவுக்கு அசத்தவில்லை. அதனால் மீண்டும் கழற்றி விடப்பட்ட அவர் தற்போது துலீப் கோப்பையிலும் தேர்ந்தெடுக்கப்படாததால் கேரியர் முடிந்ததாகவே கருதப்படுகிறது.
3. புவனேஸ்வர் குமார்: பும்ரா வருவதற்கு முன்பாக முதன்மை பவுலராக செயல்பட்ட இவர் 2014 லாரட்ஸ் போன்ற மகத்தான வெற்றிகளில் பங்காற்றினார். இருப்பினும் 2018இல் சந்தித்த காயத்துக்கு பின் தடுமாறி வரும் இவர் ஐபிஎல் தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மறுபுறம் பும்ரா சிறப்பாக விளையாடி நிலையான இடத்தை பிடித்து விட்டதால் அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு தற்போது துலீப் கோப்பையிலும் தேர்ந்தெடுக்கவில்லை.
4. உமேஷ் யாதவ்: புவனேஸ்வர் போலவே முதன்மை பவுலராக இருந்த இவரும் சமீப காலங்களில் வெளிநாடுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மறுபுறம் சிராஜ் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் சிறப்பாக விளையாடி நிலையான இடத்தை பிடித்துள்ளார். அதனால் இவரையும் கழற்றி விட்ட தேர்வுக் குழு தற்போது துலீப் கோப்பையிலும் கண்டுகொள்ளவில்லை.
இதையும் படிங்க: அதிர்ஷ்டமான இந்தியா மட்டும் தப்பிச்சுடுவாங்க.. அது மற்ற சர்வதேச அணிகளை அழிக்கப்போகுது.. பசித் அலி கவலை
5. ஹனுமா விஹாரி: 2018இல் அறிமுகமாகி மிடில் ஆர்டரில் அசத்திய இவர் 2021 சிட்னி டெஸ்ட் போட்டியை அஸ்வினுடன் சேர்ந்து காயத்துடன் போராடி டிரா செய்ய உதவினார். இருப்பினும் அதன் பின் வாய்ப்பு கிடைக்காத இவருக்கு தற்போது மாநில வாரியத்துடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே துருவ் ஜுரேல், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று அசத்தினார்கள். அதனால் 30 வயதிலேயே இவரையும் பிசிசிஐ கண்டு கொள்ளாமல் கழற்றி விட துவங்கியுள்ளது.