
நடைபெற்று முடிந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் எந்த வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்படாத நம்பிக்கை நட்சத்திர இந்திய வீரர் விராட் கோலி தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் தவிக்கிறார். ஏனெனில் கடந்த 2019க்குப்பின் பார்மை இழந்து 3 வகையான இந்திய அணியிலும் ஐபிஎல் தொடரிலும் சதமடிக்க முடியாமல் தவிக்கும் அவர் அதற்கான விமர்சனங்களை தினந்தோறும் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார். இதிலிருந்து விடுபடுவதற்காகவே தனது பேட்டிங்கை பாதித்த கேப்டன்ஷிப் அழுத்தத்தை கடந்த ஜனவரியில் படிப்படியாக ராஜினாமா செய்து முடித்து சாதாரண வீரராக விளையாடத் தொடங்கிய அவர் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது, கடைசியாக பங்கேற்ற்ற 5 ஒருநாள் போட்டிகளில் 20 ரன்களை கூட தாண்டாதது என முன்பை விட மோசமாக செயல்படுகிறார். அதனால் இதுவரை எப்போது சதமடிப்பார் என்று பேசி வந்த அனைவரும் பொறுமையிழந்து அணியிலிருந்து நீக்குமாறு கேட்க தொடங்கி விட்டார்கள். குறிப்பாக பெரிய பெயருக்கேற்றார் போல் செயல்படாமல் எத்தனை நாட்கள் சுமாராக செயல்படுவீர்கள் என்று முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார். இருப்பினும் ஏற்கனவே 20000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் அடித்து தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ள அவருக்கு கெவின் பீட்டர்சன், கிரேம் ஸ்வான், சோயப் அக்தர் போன்ற வெளிநாட்டு வீரர்கள் ஆதரவும் அளித்து வருகின்றனர்.
ஓய்வில் விராட்:
குறிப்பாக சுமாரான பார்மில் இருக்கும் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமே தவிர விமர்சிக்க கூடாது என்ற வகையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தாமாக முன்வந்து ஆதரவளித்தார். இப்படி எதிர்ப்புக்கு மத்தியில் ஆதரவும் பெருகி வரும் விராட் கோலி தரமான வீரர் என்பதாலேயே இந்திய அணி நிர்வாகமும் சுமாரான பார்ம் என்பதை காரணம் காட்டி இதுவரை நீக்காமல் இருந்து வருகிறது. இருப்பினும் அந்த ஆதரவை பயன்படுத்தாமல் தொடர்ந்து அவர் சுமாராக செயல்பட்டு வருவது அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
இதுபோக ஓடிஓடி ஏற்பட்ட களைப்பு உடலிலும் ஆட்டத்திலும் தென்படுவதால் 2 – 3 மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு ரவி சாஸ்திரி, மைக்கேல் வாகன், வாசிம் ஜாபர் போன்ற முன்னாள் வீரர்கள் ஆலோசனை வழங்கினர். ஆனால் விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்து விளையாடி வரும் அவர் சொன்னது போல் தொடர்ச்சியாகவும் விளையாடாமல் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் ஓய்வெடுத்துவிட்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மட்டும் விளையாடிவிட்டு அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வெடுக்கிறார்.
ஜிம்பாப்வே போங்க:
இந்த நிலைமையில் விராட் கோலி கேட்கும் போதெல்லாம் தலையசைக்கும் வகையில் ஓய்வு கொடுத்து வரும் தேர்வு குழுவினர் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக அவரை பார்முக்கு கொண்டு வர வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர். அதற்காக வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அவரை விளையாட வைக்க தேர்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏனெனில் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ஆசிய கோப்பை நடைபெறுவதால் அதற்கு முன்பாக விராட் கோலி நல்ல பார்முக்கு திரும்புவது அவசியம் என்று கருதும் தேர்வுக்குழு அதற்கு ஜிம்பாப்வே தொடர் நல்ல வாய்ப்பாக அமையும் என்று கருதுவதாக தெரிகிறது.
இது பற்றி இந்திய தேர்வு குழு உறுப்பினர் ஒருவர் பேசியது பின்வருமாறு. “வெஸ்ட் இண்டீஸ் தொடரில் எடுக்கும் ஓய்வு விராட் கோலி ஃபார்முக்கு திரும்ப புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்று நம்புகிறோம். ஆனால் தரமான கிரிக்கெட்டில் விளையாடாமல் ஃபார்முக்கு திரும்ப முடியாது என்பதால் அவர் ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாட நாங்கள் விரும்புகிறோம்.
அந்த வாய்ப்பு அவருக்கு மிகவும் பிடித்த ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி ஆசிய கோப்பைக்கு முன்பாக பார்முக்கு திரும்ப உதவலாம். இதற்கான இறுதி முடிவை அந்த தொடருக்கான அணியை தேர்வு செய்யும் முன்பாக எடுக்க உள்ளோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க : தெ.ஆ டி20 தொடரின் சிஎஸ்கேவின் கிளை அறிமுகம் – கால் பதித்த 6 ஐபிஎல் அணிகள் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
வரும் ஆகஸ்ட் 18, 20, 22 ஆகிய தேதிகளில் நடைபெறும் அந்த தொடரில் 2-வது தர இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிக்கு எதிராக விராட் கோலி போன்ற உலகத்தரம் வாய்ந்த தரமான வீரரை விளையாட வைக்கும் தேர்வுக்குழுவின் இந்த முடிவை அவரின் ரசிகர்கள் அவரை அவமானப்படுத்தும் ஒன்றாகவே பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.