எல்லாரும் ரோஹித்தை தான் செலக்ட் பண்ணாங்க. ஆனா கோலியோட கேரியரை காப்பாத்துனதே தோனி தான் – சேவாக் தகவல்

Rohit-Dhoni-Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக பல்வேறு கோப்பைகளை கைப்பற்றி தந்தது மட்டுமின்றி இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரங்களையும் உருவாக்கியவர் என்ற சிறப்பையும் உடையவர். ஏனெனில் அவரது தலைமையின் கீழ் சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற பல வீரர்கள் இந்திய அணியில் மிளிர துவங்கினர்.

குறிப்பாக ஆரம்ப கட்டத்தில் கங்குலி உருவாக்கிய அணியை வைத்து மிகச் சிறப்பாக செயல்பட்ட தோனி அதன் பின்னர் இளம் வீரர்களை கட்டமைத்து இந்திய அணியை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார் என்றே கூறலாம். அவரது தலைமையின் கீழ் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ஒதுக்கப்பட்டாலும் அடுத்த தலைமுறை வீரர்கள் உருவாக்கப்பட்டனர்.

- Advertisement -

அந்த வகையில் தோனியின் தலைமையில் தான் விராட் கோலியின் டெஸ்ட் கேரியர் காப்பாற்றப்பட்டது என இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான வீரேந்திர சேவாக் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : 2012 ஆம் ஆண்டு இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் ரோகித் சர்மாவை தான் விராட் கோலிக்கு பதிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம்பெற செய்ய நினைத்தனர். ஆனால் அப்போது தோனி தான் விராட் கோலி தான் அணியில் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்.

அந்த சமயத்தில் நான் இந்திய அணியின் துணை கேப்டனாகவும் இருந்தேன். அப்பொழுது தோனி எடுத்த முடிவினால் தான் இன்று விராட் கோலியின் டெஸ்ட் கேரியர் இவ்வளவு வெற்றிகரமாக உள்ளது. தோனி இல்லை என்றால் விராட் கோலியின் டெஸ்ட் கேரியர் எப்போதோ முடிந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தது போலவே 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி தான் விளையாடிய முதல் 6 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 21 ரன்கள் சராசரியுடனே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக 2011-12 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது முதல் இரண்டு போட்டிகளில் அவர் மொத்தமாக 50 ரன்கள் கூட தொடவில்லை. இதன் காரணமாக விராட் கோலியை அணியிலிருந்து நீக்கி ரோகித் சர்மாவை இடம்பெற வைக்க வேண்டும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் தோனி தான் விராட் கோலி டெஸ்ட் அணிக்கு நிச்சயம் தேவை அவரால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்று ஆதரித்தார்.

இதையும் படிங்க : ஐசிசி உலக கோப்பை 2023 : கோப்பையை தக்க வைக்கும் தரம் இருக்கா.. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியின் முழுமையான அலசல்

அதன் பின்னரே விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலும் விளையாடினார். அதுமட்டுமின்றி நான்காவது டெஸ்ட் போட்டியின் போது தனது முதல் டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்திருந்தார். அதன் பிறகு தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி தற்போது 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதங்கள் உடன் 49 ரன்கள் சராசரியுடன் 8676 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement