ஐசிசி உலக கோப்பை 2023 : கோப்பையை தக்க வைக்கும் தரம் இருக்கா.. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியின் முழுமையான அலசல்

England Team
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் அதற்கு பெரிய சவாலை கொடுக்கும் எதிரணிகளில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து முதன்மையானதாக திகழ்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் 2017 வரை தடுமாறிக் கொண்டிருந்த அந்த அணியை இயன் மோர்கன் புதிய கேப்டனாக பொறுப்பேற்று ஜோஸ் பட்லர், மொயின் அலி போன்ற அதிரடியாக விளையாடும் வீரர்களை தேடி கண்டறிந்து வாய்ப்புகளை கொடுத்து வளர்த்தார்.

அதன் பயனாக அதிரடி படையாக மாறிய இங்கிலாந்து தொடர்ந்து 300 – 400 ரன்களை குவிக்கும் மிரட்டலான அணியாக உருவெடுத்தது. அதே வேகத்தில் 2019 உலகக்கோப்பையை சொந்த மண்ணில் வென்ற அந்த அணி அதன் பின்பும் தொடர்ந்து அதிரடி பாதையில் நடந்து 2022 டி20 உலகக் கோப்பையை வென்றது. அந்த கோப்பையை கேப்டனாக வென்ற ஜோஸ் பட்லர் தற்போது இந்த 50 ஓவர் உலகக் கோப்பையிலும் இங்கிலாந்தை அதிரடியாக விளையாடும் துவக்க வீரராக வழி நடத்த உள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்து அணி:
அவருடன் சுமாரான ஃபார்மில் தவித்த ஜேசன் ராயை கழற்றி விட்டுள்ள இங்கிலாந்து டேவிட் மாலனை சேர்த்துள்ளதால் ஓப்பனிங் ஜோடி வலுவானதாகவே இருக்கிறது. அவர்களுடன் ஜானி பேர்ஸ்டோ டாப் ஆர்டரில் அடித்து நொறுக்கும் திறமை கொண்டவராக இருக்கும் நிலையில் மிடில் ஆர்டரில் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது சற்று சுமாரான ஃபார்மில் இருந்தாலும் விராட் கோலிக்கு நிகரான கிளாஸ் நிறைந்த அவர் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் அசத்தும் திறமை கொண்டவர் என்பதில் சந்தேகமில்லை.

அவருடன் பேட்டிங் துறையை வலுப்படுத்துவதற்கு நல்ல ஃபார்மில் இருக்கும் இளம் வீரர் ஹரி ப்ரூக் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது இங்கிலாந்து அணியை மேலும் மெருகேற்றியுள்ளது. அதை விட 2019 உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நாட்டுக்காக ஓய்வு முடிவை வாபஸ் பெற்று இந்த தொடரில் ஸ்பெஷலாக விளையாடுவது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய பலமாகும். அவரை போலவே சுட்டிக் குழந்தையாக அசத்தும் திறமை கொண்ட ஷாம் கரண் 2022 டி20 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருது வென்ற நல்ல ஆல் ரவுண்டராக இருக்கிறார்.

- Advertisement -

மேலும் சரமாரியாக அடித்து நொறுக்கும் திறமை கொண்ட லியாம் லிவிங்ஸ்டன் சுழல் பந்துகளை வீசுவார் என்பதால் இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர்கள் துறை மிகவும் வலுவானதாகவும் அதிரடியானதாகவும் இருக்கிறது. அதே போல மொய்ன் அலி டாப் முதல் மிடில் வரை அனைத்து இடங்களிலும் விளையாடக்கூடிய அதிரடியான சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக இருக்கும் நிலையில் முதன்மை ஸ்பின்னரான அடில் ரசித் ஏற்கனவே விராட் கோலி போன்ற மகத்தான வீரர்களை மாயாஜால சுழலில் சிக்க வைத்த திறமை கொண்டவராக திகழ்கிறார்.

இருப்பினும் வேகப்பந்து வீச்சு துறையில் ஜோப்ரா ஆர்ச்சர் காயத்தால் விளையாட மாட்டார் என்றாலும் மார்க் வுட், கிறிஸ் ஓக்ஸ் ஆகியோர் 140 – 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய திறமையை கொண்டிருப்பதால் இங்கிலாந்துக்கு பிரச்சினை ஏற்படாது என்று நம்பலாம். இவர்களுடன் இடது கை பவுலராக சவாலை கொடுக்க ரீஸ் டாப்லி, கஸ் அட்கின்ஷன் போன்ற எக்ஸ்ட்ரா வீரர்களும் இங்கிலாந்து அணியை பலப்படுத்தும் நோக்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: IND vs AUS : ஆஸியின் கோட்டை.. முதல் ஒன்டே நடைபெறும் மொஹாலி மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

இந்த அணியில் பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய கால சூழ்நிலைகளையும் இந்திய வீரர்களின் பலம் பலவீனங்களையும் தெரிந்து வைத்துள்ளனர். எனவே தங்களுடைய அதிரடியான அணுகுமுறையை பயன்படுத்தி இந்தியா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா போன்ற உலகின் இதர அணிகளுக்கும் சவாலை கொடுத்து 2023 உலக கோப்பையை வெல்லும் அளவுக்கு இங்கிலாந்து அணியில் தரத்திற்கு பஞ்சமில்லை என்பதே கிரிக்தமிழ் இணையத்தின் அலசலாகும்.

Advertisement