டீ காக் அதிரடியில் குவாலிபயர் 1 போட்டியில் தோற்ற சூப்பர் கிங்ஸ் – கடைசி வாய்ப்பில் எதிரியை சமாளித்து ஃபைனல் செல்லுமா?

- Advertisement -

அமெரிக்காவில் வரலாற்றில் முதல் முறையாக மேஜர் லீக் எனப்படும் புதிய டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஜூலை 14ஆம் தேதி துவங்கியது. அத்தொடரில் ஐபிஎல் தொடரில் அணிகளை வைத்துள்ள மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய நிர்வாகங்கள் வாங்கிய கிளை உட்பட மொத்தம் 6 அணிகள் களமிறங்கின. அதில் லீக் சுற்றின் முடிவில் கொல்கத்தா நிர்வகிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறின.

மறுபுறம் சீட்டல் ஆர்க்கஸ், சென்னை நிர்வகிக்கும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ், வாஷிங்டன் ஃப்ரீடம், மும்பை நிர்வகிக்கும் எம்ஐ ஆகிய 4 அணிகள் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்தன. அந்த நிலையில் ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த சீட்டல் ஆர்க்கஸ் மற்றும் சென்னை நிர்வகிக்கும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாலஸ் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற டெக்ஸாஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

ஃபைனல் செல்லுமா:
அதை தொடர்ந்து களமிறங்கிய டெக்ஸாஸ் அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் 5 (8) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த டேவோன் கான்வேயும் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 24 (21) ரன்களில் ஆட்டமிழந்தார். போதாக்குறைக்கு மிடில் ஆர்டரில் கோடி செட்டி 24 (21) மிலந்த் குமார் 5 (10) டேவிட் மில்லர் 16 (17) மிட்சேல் சாட்னர் 2 (5) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இறுதியில் டேனியல் சாம்ஸ் 26* (25) ரன்களும் செவேஜ் 14 (11) ரன்களும் எடுத்ததால் ஓரளவு தப்பிய டெக்ஸாஸ் 20 ஓவர்களில் வெறும் 126/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய சீட்டல் சார்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரூ டை 3 விக்கெட்டுகளும் இமாத் வசிம் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 127 என்ற சுலபமான இலக்கை துரத்திய சீட்டல் அணிக்கு நௌமன் அன்வர் 2 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மற்றொரு தொடக்க வீரர் குயின் டீ காக் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி விரைவாக ரன்களை சேர்த்தார்.

- Advertisement -

அதற்கு உறுதுணையாக சினேகன் ஜெயசூர்யா நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி கை கொடுத்ததை பயன்படுத்திய அவர் எதிர்ப்புறம் தொடர்ந்து டெக்ஸாஸ் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு அரை சதமடித்து வெற்றியை உறுதி செய்தார். நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று வெளுத்து வாங்கிய அவர் 10 பவுண்டரி 4 சிக்சருடன் 88* (50) ரன்களை 176.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

அவருடன் ஸ்னேகன் ஜெயசூர்யா 31* (34) ரன்கள் எடுத்ததால் 15 ஓவரிலேயே 127/1 ரன்கள் எடுத்த சீட்டல் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஜூலை 31ஆம் தேதி நடைபெறும் இத்தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு நேரடியாக முதல் அணியாக தகுதி பெற்றது. மறுபுறம் எதிர்பார்த்தது போலவே பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய டெக்ஸால் அணிக்கு ரஷ்டி தேரன் 1 விக்கெட் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. அதைத்தொடர்ந்து அதே மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்த மும்பை நிர்வகிக்கும் எம்ஐ நியூயார்க் அணி 3வது இடம் பிடித்த வாஷிங்டன் பிரீடம் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இதையும் படிங்க:IND vs WI : ஆசியாவுக்கு வெளியே கில்லியாக அசத்தும் குல்தீப் யாதவ் – வெ.இ மண்ணில் புதிய வரலாற்று சாதனை (வீடியோ இணைப்பு)

குறிப்பாக தேவாலட் ப்ரேவிஸ் 57 (41) ரன்கள் எடுத்த உதவியுடன் எம்ஐ நிர்ணயித்த 142 ரன்களை துரத்திய வாஷிங்டன் ஆரம்பம் முதல் தடுமாற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 125/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக மார்கோ யான்சென் 28 (18) ரன்கள் எடுக்க எம்ஐ சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளை எடுத்து வெற்றி பெற வைத்தார். அதன் காரணமாக ஜூலை 29இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் ஐபிஎல் தொடரின் பரம எதிரியான மும்பை நிர்வகிக்கும் பொல்லார்ட் தலைமையிலான எம்ஐ அணியை ஃபைனலுக்கு செல்லும் கடைசி வாய்ப்பில் சென்னை நிர்வகிக்கும் டு பிளேஸிஸ் தலைமையிலான டெக்சாஸ் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement