IND vs WI : ஆசியாவுக்கு வெளியே கில்லியாக அசத்தும் குல்தீப் யாதவ் – வெ.இ மண்ணில் புதிய வரலாற்று சாதனை (வீடியோ இணைப்பு)

Kuldeep yadav
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. ஜூலை 27ஆம் தேதி பார்படாஸ் நகரில் துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆரம்ப முதலே திணறலான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 114 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக கேப்டன் சாய் ஹோ போராடி 43 (45) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 115 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சுப்மன் கில் 9, சூரியகுமார் யாதவ் 19, ஹர்திக் பாண்டியா 5, சர்துல் தாக்கூர் 1 என டாப் ஆர்டரில் களமிறங்கி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் ஓப்பனிங் இடத்தில் அசத்திய இசான் கிசான் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 52 (46) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அசத்தல் சாதனை:
அவர்களுடன் ரவீந்திர ஜடேஜா 16* ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா 12* ரன்களும் எடுத்ததால் 22.5 ஓவர்களிலேயே 118/5 ரன்கள் எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகளை எடுத்தும் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய வெஸ்ட் இண்டீஸ் போராடி தோற்றது. இந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றிய போதிலும் 3 ஓவரில் 2 மெய்டன் உட்பட வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அதிலும் இந்தியாவுக்கு சவாலை கொடுத்த கேப்டன் சாய் ஹோப்பை 43 (45) ரன்களில் அவுட்டாக்கிய அவர் டாமினிக் ட்ரெக்ஸ் 3, யானிக் கேரி 3, ஜெய்டேன் சீல்ஸ் 0 என டெயில் எண்டர்களை ஒற்றை இலக்க ரன்களில் காலி செய்து வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்கள் கூட எடுக்க முடியாத அளவுக்கு சிறப்பாக பந்து வீசினார். அதை விட வெறும் 6 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்து துல்லியமாக செயல்பட்ட அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையும் படைத்துள்ளார்.

- Advertisement -

அந்த பட்டியல்:
1. குல்தீப் யாதவ் : 4/6, பார்படாஸ், 2023*
2. யுஸ்வேந்திரா சஹால் : 4/17, போர்ட் ஆஃப் ஸ்பெயின், 2022
3. புவனேஸ்வர் குமார் : 4/31, போர்ட் ஆஃப் ஸ்பெயின், 2019
4. அமித் மிஸ்ரா : 4/31, நார்த் சவுண்ட், 2011
5. முகமத் ஷமி : 4/48, கிங்ஸ்டன், 2017

உத்திரப்பிரதேசத்தை சேர்நத அவர் கடந்த 2017இல் சர்வதேச அரங்கில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே அஸ்வினை மிஞ்சும் அளவுக்கு சைனாமேன் பவுலிங் ஆக்சனை பயன்படுத்தி சிறப்பாக பந்து வீசி நிரந்தரமான இடம் பிடித்தார். குறிப்பாக 2019 உலகக்கோப்பையில் முதன்மை ஸ்பின்னராக விளையாடிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அஸ்வினை மிஞ்சும் அளவுக்கு சிட்னியில் 6 விக்கெட்டுகளையும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்களையும் எடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.

- Advertisement -

ஆனால் அதன் பின் ஃபார்மை இழந்து தடுமாறியதால் 2021 டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பை இழந்த அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியிலும் கழற்றி விடப்பட்ட போதிலும் மனம் தளராமல் டெல்லி அணியில் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்தார். அதில் கடந்த டிசம்பரில் வங்கதேசம் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்றும் அடுத்த போட்டியிலேயே அதிரடியாக கழற்றி விடப்பட்ட அவர் யாரையும் குறை சொல்லாமல் மீண்டும் இந்த போட்டியில் கிடைத்த வாய்ப்பில் அசத்தியுள்ளார்.

இதையும் படிங்க:அணியின் நலனுக்காக கபில் தேவ், டிராவிட் வரிசையில் 12 வருடங்கள் கழித்து சுயநலமற்ற முடிவை எடுத்த ஹிட்மேன் – ஃபினிஷிங் வீடியோ

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தில் 46 இன்னிங்ஸ்களில் ஒருமுறை 4+ விக்கெட்களை எடுத்துள்ள அவர் சவாலான ஆசிய கண்டத்திற்கு வெளியே 34 இன்னிங்ஸிலேயே 6 முறை 4+ விக்கெட்களை எடுத்து வெளிநாடுகளில் கில்லியாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியதாகும்.

Advertisement