அதுக்காக ஜடேஜாவுக்கு நன்றி தான் சொல்லணும்.. அறிமுக போட்டியில் ரன் அவுட்டானது பற்றி பேசிய சர்பராஸ்

Sarfaraz Khan 2
- Advertisement -

ராஜ்கோட் நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாளில் 326/5 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 10, சுப்மன் கில் 0, ரஜத் படிடார் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 33/3 என்ற தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்து 131 ரன்களும் அறிமுகப் போட்டியில் அசத்திய சர்பராஸ் கான் அரை சதமடித்து 62 ரன்களும் எடுத்தனர். அவர்களுடன் சேர்ந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா சதமடித்து 110* ரன்கள் குவித்து தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறார். முன்னதாக கடந்த சில வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து போராடி வந்த சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் இப்போட்டியில் அறிமுகமாக களமிறங்கினார்.

- Advertisement -

நன்றி சொல்லணும்:
அந்த வாய்ப்பில் அதிரடியாக விளையாடிய அவர் 48 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அறிமுக போட்டியிலேயே 2வது அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் என்ற ஹர்திக் பாண்டியாவின் சாதனையை சமன் செய்தார். அந்த வகையில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் நன்கு செட்டிலாகி 62 ரன்கள் எடுத்த அவர் விளையாடிய விதத்திற்கும் வேகத்திற்கும் கண்டிப்பாக சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் எதிர்ப்புறம் 99 ரன்களில் பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா ஒரு பந்தை அருகிலேயே அடித்து விட்டு சிங்கிள் எடுக்க அழைத்தார். அப்போது இங்கிலாந்து ஃபீல்டர் பந்தை எடுத்ததை பார்த்த ஜடேஜா மீண்டும் வெள்ளைக் கோட்டுக்குள் சென்றார். ஆனால் அவரை நம்பி எதிர்புறம் வெளியே வந்த சர்பராஸ் கான் மீண்டும் வெள்ளை கோட்டுக்குள் வருவதற்குள் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.

- Advertisement -

இருப்பினும் இதெல்லாம் சகஜம் என்று தெரிவிக்கும் சர்பராஸ் கான் இப்போட்டியில் 62 ரன்கள் அடிக்க முக்கிய ஆலோசனை தெரிவித்த ஜடேஜாவுக்கு நன்றி தான் சொல்ல வேண்டும் என்ற வகையில் கூறியுள்ளார். இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்படி தவறான புரிதலால் அவுட்டாவது விளையாட்டின் ஒரு அங்கம். இப்படி நடப்பது சகஜம். உண்மையில் இன்னிங்ஸ் முழுவதும் ஜடேஜா என்னை வழி நடத்தினார்”

இதையும் படிங்க: கபில் தேவ், அஷ்வினை தொடர்ந்து 3 ஆவது இந்திய வீரராக ரவீந்திர ஜடேஜா படைத்த மாஸ் சாதனை – அதும் சொந்த ஊர்ல வந்திருக்கு

“குறிப்பாக களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடினாலே ரன்கள் தாமாக வரும் என்று அவர் எனக்கு ஆலோசனை சொன்னார். இறுதியில் போட்டி முடிந்ததும் சற்று தவறான புரிதலால் ரன் அவுட்டானதாக அவர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார். எனவே அது பரவாயில்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2வது நாளிலும் சிறப்பாக விளையாடி இந்தியா 500 ரன்கள் தொடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement