
இந்தியாவில் 2025/26 விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் ஜனவரி 8ஆம் தேதி எலைட் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. காலை 9 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி முடிந்தளவு போராடி 45.1 ஓவரில் 216 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அன்மோல்ப்ரீத் சிங் 57, ரமன்தீப் சிங் 72 ரன்கள் எடுத்தனர். மும்பைக்கு அதிகபட்சமாக முசீர் கான் 3, ஒங்கர் தூக்காரம் 2, சிவம் துபே 2, சசாங் அட்டார்டே 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.
அடுத்து விளையாடிய மும்பை அணிக்கு முசீர் கான் 21, ரகுவன்ஷி 23 ரன்னில் அவுட்டானார்கள். ஆனால் அடுத்து வந்த சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக பஞ்சாப் கேப்டன் அபிஷேக் ஷர்மா வீசிய ஓவரை எதிர்கொண்ட அவர் முதல் பந்திலேயே 6 அடித்து அடுத்தப் பந்தில் பவுண்டரியை தெறிக்க விட்டார்.
அதற்கடுத்த 2 பந்துகளிலும் சிக்ஸர், பவுண்டரி அடித்த சர்பராஸ் கான் கடைசி 2 பந்துகளிலும் அபிஷேக்கிற்கு கருணைக் காட்டாமல் சிக்ஸர், பவுண்டரியை பறக்க விட்டார். அந்த வகையில் 6, 4, 6, 4, 6, 4 என ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்த அவர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வெறும் 15 பந்தில் அரை சதத்தை அடித்தார். இதன் வாயிலாக விஜய் ஹசாரே கோப்பையிலும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டிலும் வேகமாக அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற இரட்டை வரலாற்றுச் சாதனையை சர்பராஸ் கான் படைத்தார்.
இதற்கு முன் 2020/21 விஜய் ஹசாரே கோப்பையில் பரோடா வீரர் அஜித் சேத் சத்தீஸ்கருக்கு எதிராக 16 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. அந்த சாதனையை உடைத்த சர்பராஸ் கான் 7 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62 (20) ரன்களை விளாசி அவுட்டானார். அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 15, சிவம் துபே 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
இதையும் படிங்க: டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை கடந்து எலைட் பட்டியலில் இணைந்து சாதனை நிகழ்த்திய – டிராவிஸ் ஹெட்
மறுபுறம் காயத்திலிருந்து குணமடைந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 45 (34) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் அவுட்டானார். அதைப் பயன்படுத்திய பஞ்சாப் லோயர் ஆர்டரில் ஹர்திக் தாமோர் 15, சைராஜ் பட்டேல் 1 என மற்ற வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்தது. இறுதியில் 26.2 ஓவரில் மும்பையை 215 ரன்களுக்கு சுருட்டிய பஞ்சாப் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மயங் மார்க்கண்டே, குர்நுர் ப்ரார் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.