ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது ஜனவரி 3-ஆம் தேதி துவங்கி போட்டியின் கடைசி நாளான இன்று முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
விராட் கோலியின் சாதனையை கடந்த டிராவிஸ் ஹெட் :
இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி சார்பாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணியின் துவக்க வீரரான டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்சில் 166 பந்துகளை சந்தித்து 24 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 163 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணி 567 ரன்கள் என்கிற மிகப்பெரிய ரன் குவிப்பை வழங்க உதவியிருந்தார்.
அதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸிலும் துவக்க வீரராக களமிறங்கிய அவர் 35 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 29 ரன்கள் குவித்து சேசிங்கிற்கு உதவியிருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றதால் அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்த விருதின் மூலம் இந்திய அணியின் முன்னாள் வீரரான விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றியையும் டெஸ்ட் போட்டிகளில் டிராவிஸ் ஹெட் தகர்த்துள்ளார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் டிராவிஸ் ஹெட் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 10 முறை டெஸ்ட் போட்டிகளில் ஆட்டநாயகன் விருதினை வென்றுள்ளார்.
கடந்த ஆண்டு அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வினையும் அறிவித்துவிட்டார். இவ்வேளையில் தற்போது தனது 65-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய டிராவிஸ் ஹெட் 11-வது முறையாக டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதினை வென்று டெஸ்ட் போட்டியில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர்களின் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இதையும் படிங்க : இந்திய மண்ணில் அந்த 2 சூப்பர் ஸ்டாருக்கு எதிராக பந்துவீசுவது ரொம்ப கஷ்டம் – கைல் ஜெமிசன் பேட்டி
இந்த பட்டியலில் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதினை வென்ற வீரராக ஜேக் காலிஸ் 23 முறை ஆட்டநாயகன் விருதினை வென்று முதலிடத்திலும், அவருக்கு அடுத்து முரளிதரன் 19 முறை ஆட்டநாயகன் விருதினை வென்று இரண்டாவது இடத்திலும், வாசிம் அக்ரம் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோர் 17 முறை ஆட்டநாயகன் விருது பெற்று மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



