மும்பையை சேர்ந்த 26 வயதான இளம் வீரரான சர்ஃபராஸ் கான் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 2014-ஆம் ஆண்டு மற்றும் 2016-ஆம் ஆண்டு விளையாடியிருந்தார். மிக இளம் வயதிலேயே தனது திறனை நிரூபித்த அவருக்கு 2015-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடவும் ஒப்பந்தம் கிடைத்தது.
மிக இளம் வயதிலேயே தனது திறமையை உலக கிரிக்கெட்டுக்கு அவர் வெளிக்காட்டி இருந்தாலும் இந்திய அணிக்கான வாய்ப்பினை பெறுவதற்காக கடந்த ஏழு ஆண்டுகளாக போராடி வந்தார். உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக ரன்களை மலைபோல் குவித்த அவர் கடந்த மூன்று ரஞ்சி தொடர்களாக பல சதங்களை விளாசி ரன்களை குவித்து வந்தார்.
அதன்பின்னர் ஒவ்வொரு முறையும் புதிய தொடர்களுக்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்படும்போது அவரது பெயர் இடம்பெறுமா? இடம்பெறாதா? என்பதே பலரது மத்தியில் பேசுபொருளாக இருந்து வந்தது.
அந்தவகையில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருந்த அவர் மூன்றாவது போட்டியில் ஒரு வழியாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அறிமுக வாய்ப்பினை பெற்றார். இப்படி ஏழு ஆண்டு காலமாக காத்திருந்து தனது முதல் வாய்ப்பை பெற்ற சர்பராஸ் கான் தனது முதல் இன்னிங்சிலேயே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளார்.
இந்த போட்டியில் 66 பந்துகளை சந்தித்த அவர் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 62 ரன்கள் எடுத்திருந்த வேளையில் ஜடேஜாவின் தவறான அழைப்பால் ரன் அவுட்டாகி வெளியேறியிருந்தார். முதல் தர கிரிக்கெட்டில் 45 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 69 சராசரி வைத்திருந்த வேளையில் தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான போட்டியிலேயே 62 ரன்கள் குவித்து அசத்தினார்.
இதையும் படிங்க : பென் ஸ்டோக்ஸ் போட்ட திட்டத்தை பயமில்லாம உடைச்சு அடிச்சுட்டுட்டாரு.. இந்திய வீரரை பாராட்டிய காலிங்வுட்
முதல்தர கிரிக்கெட்டில் எப்படி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினாரோ அதையே சர்வதேச கிரிக்கெட்டிலும் செய்து அசத்தியுள்ளார். அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக நிச்சயம் அவருக்கு மேலும் சில வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவினை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.