இந்தியா 376/3 ரன்ஸ்.. மார்க் வுட்’டுக்கு எதிராக அசால்ட்டான அப்பர் கட்.. 8 போர்ஸ் 1 சிக்ஸருடன் அசத்தும் சர்பராஸ் கான்

Sarfaraz Run 3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மார்ச் 7ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்ததால் 100/1 என்ற வலுவான துவக்கத்தை பெற்றது. ஆனால் அதன் பின் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணி வெறும் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 4, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆரம்பத்திலேயே சிறப்பாக விளையாடி 104 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

- Advertisement -

வலுவான நிலையில் இந்தியா:
அதில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த சுப்மன் கில்லும் இங்கிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டார். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 171 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்த இந்த ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா முதலாவதாக சதமடித்தார்.

இருப்பினும் அவரை 8 மாதங்கள் கழித்து இத்தொடரில் முதல் முறையாக பந்து வீசிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 103 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். அதே போல மறுபுறம் சதமடித்திருந்த கில்லையும் அடுத்த சில ஓவர்களில் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் 110 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார். அதைத் தொடர்ந்து அறிமுகப் போட்டியில் களமிறங்கிய தேவதூத் படிக்கல் – சர்பராஸ்கான் ஆகிய இளம் வீரர்கள் ஜோடி சேர்ந்தனர்.

- Advertisement -

அதில் படிக்கல் சற்று நிதானமாக விளையாடிய நிலையில் மறுபுறம் சர்பராஸ் கான் அதிரடியாக பேட்டிங் செய்து ரன்கள் குவித்தார். குறிப்பாக மார்க் வுட் வீசிய பவுன்சர் பந்தை அப்படியே குனிந்து அசால்டாக அப்பர் கட் ஷாட்டை அடித்து பவுண்டரியாக பறக்க விட்ட அவர் அதற்கடுத்த ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசினார். அந்த வகையில் அதிரடியாக விளையாடிய அவர் படிக்கலுக்கு முன்பாக 55 பந்துகளிலேயே 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் தன்னுடைய 3வது அரை சதத்தை அடித்து 56* (59) ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க: 8 மாத இடைவெளிக்கு பின்னர் வீசிய முதல் பந்திலேயே அற்புதம் நிகழ்த்திய பென் ஸ்டோக்ஸ் – அதிர்ந்து போன ரோஹித் சர்மா

அவருக்கு முன்பாகவே களமிறங்கி நிதானமாக விளையாடும் படிக்கல் இதுவரை 44* ரன்கள் எடுத்துள்ளார். அதனால் இரண்டாவது நாள் தேனீர் இடைவேளையில் 376/3 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இப்போட்டியில் இங்கிலாந்தை விட 158 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றிக்கான அடித்தளத்தை வலுவாக அமைத்துள்ளது. இன்னும் 7 விக்கெட்டுகள் கைவசம் இருப்பதால் இந்த போட்டியில் இந்தியா 500 ரன்கள் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement