இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கும் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகமான பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலமாக அறிவித்தது.
அதன்படி ரோகித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட இந்த இந்திய அணியில் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் முகேஷ் குமார் போன்ற வீரர்களுக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் தோல்வியை சந்தித்தால் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஒரு சில மாற்றங்களை மட்டுமே இந்திய அணி செய்துள்ளது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட 25 வயதான இளம் வீரர் சர்பராஸ் கானுக்கு மீண்டும் இடம் கிடைக்காதது பல்வேறு முன்னாள் வீரர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏனெனில் இதுவரை 37 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள சர்பராஸ் கான் 13 சதங்களுடன் 3,500 ரன்களுக்கு மேல் குவித்துள்ள வேளையில் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என்று அனைவராலும் பேசப்பட்டது. ஆனாலும் இந்த தொடரிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
தொடர்ச்சியாக உள்நாட்டு தொடர்களில் ரன்களை மலை போல் குவித்து வரும் சர்பராஸ் கான் இன்னும் என்னதான் செய்ய வேண்டும்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பு வருகின்றனர். அதேபோன்று இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஏற்றவாறு தான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு டெஸ்ட் வடிவத்திலாவது வாய்ப்பு கொடுத்து இருக்கலாம் என்று அனைவரும் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க : கேரியர் முடிஞ்சுன்னு லண்டன் போன எனக்கு அதிர்ஷ்டமா வெ.இ சான்ஸ் கிடைக்கும்னு எதிர்பாக்கல – இந்திய வீரர் மகிழ்ச்சி பேட்டி
இருந்தாலும் இந்திய அணியின் தேர்வு முழுக்க முழுக்க ஐ.பி.எல் தொடரை சார்ந்தே இருக்கிறது என்றும் அதனால் இனிவரும் காலங்களில் சர்ஃபராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டாம் என்றும் சில முன்னாள் வீரர்கள் காட்டமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.