சம்பள ஒப்பந்தத்தில் சர்பராஸ், துருவ் ஜுரேல் இடம் பெறாதது ஏன்? எப்போது தேர்வாவார்கள்.. பிசிசிஐ அறிவிப்பு

BCCI
- Advertisement -

இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 2023 – 24 காலண்டர் வருடத்தில் விளையாடும் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அறிவுறுத்தியும் அதை பின்பற்றாத இஷான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

அந்த நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் 7 கோடிகளை சம்பளமாக பெறும் ஏ ப்ளஸ் பிரிவில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். அதே போல 5 கோடிகளை சம்பளமாக பெறும் ஏ பிரிவில் தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், ஷமி, கே.எல் ராகுல், சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா ஒப்பந்தமாகியுள்ளனர்.

- Advertisement -

சர்ப்ராஸ், ஜுரேல் எப்போது:
மேலும் 3 கோடிகளை சம்பளமாக பெறும் பி பிரிவில் சூரியகுமார் யாதவ், குல்தீப் யாதவ், ரிசப் பண்ட், அக்சர் படேல் ஜெய்ஸ்வால் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். இறுதியாக 1 கோடி சம்பளமாக பெறும் சி பிரிவில் சமீப காலங்களில் வாய்ப்பு பெற்று அசத்திய ரிங்கு சிங், திலக் வர்மா, முகேஷ் குமார் மற்றும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் உட்பட மொத்தம் 15 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தில் சமீபத்தில் அறிமுகமாகி புதிய நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ள ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் முதல் முறையாக தேர்வாகியுள்ளார்கள். ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அசத்திய சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் மட்டும் இன்னும் இந்த ஒப்பந்தத்தில் தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisement -

இதற்கான காரணம் என்னவெனில் பிசிசிஐ விதிமுறைப்படி குறைந்தபட்சம் 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடிய வீரர்களை மட்டுமே மதிய ஒப்பந்தத்தில் ஒப்பந்தம் செய்ய முடியும். ஆனால் சர்பராஸ் மற்றும் ஜுரேல் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர். அதன் காரணத்தாலேயே அவர்கள் இந்த ஒப்பந்தத்தில் தேர்வு செய்யப்படவில்லை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அந்த இந்திய வீரரை பாத்து என்னோட பவுலிங்கை டெவெலப் பண்ணிருக்கேன்.. ஓப்பனாக பேசிய ஆண்டர்சன்

அதே சமயம் வரும் மார்ச் 7ஆம் தேதி தரம்சாலாவில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது போட்டி நடைபெற உள்ளது. அப்போட்டியில் அந்த 2 வீரர்களும் விளையாடினால் தங்களுடைய கேரியரில் 3 டெஸ்ட் போட்டியில் விளையாடிய கணக்கு வந்து விடும். எனவே 5வது போட்டி முடிந்ததும் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் சி பிரிவில் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement