இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணியானது இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என தற்போது தொடரை சமன் செய்துள்ளது. அடுத்ததாக மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நாளை பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெறவுள்ள வேளையில் ரோஹித் சர்மா தலைமையிலான புதிய வீரர்களை கொண்ட இந்திய அணி அந்த போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பித்ததிலிருந்தே இந்திய அணிக்கு ஏகப்பட்ட பின்னடைவுகள் தொடர்ந்து கொண்டே வருகின்றன. ஏனெனில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி, விராட் கோலி ஆகியோர் விளையாடாத வேளையில் மேலும் சில வீரர்கள் காயம் காரணமாக தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
அந்த வகையில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த நட்சத்திர வீரர்கள் கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக அணியில் இருந்து வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டபோது மீண்டும் அவர்கள் இருவரும் இடம் பிடித்திருந்தாலும் கே.எல் ராகுல் மூன்றாவது போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போன்று ஜடேஜாவும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாடுவாரா? என்பது உறுதியற்ற ஒன்றாகவே உள்ளது. அதோடு ஷ்ரேயாஸ் ஐயர் எஞ்சியுள்ள தொடரிலிருந்தே வெளியேறியுள்ளதால் தற்போது இந்திய அணியின் மிடில் ஆர்டர் எவ்வாறு அமையப்போகிறது என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. அதோடு அனுபவமற்ற வீரர்களை கொண்டே இந்திய அணியின் மிடில் ஆர்டர் இருக்கும் என்றும் தெரிகிறது.
இருப்பினும் முன்னணி வீரர்கள் இல்லாத வேளையில் வாய்ப்புக்காக காத்திருக்கும் சில வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே விராட் கோலிக்கு பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ரஜத் பட்டிதார் அறிமுகமாகி இருந்த வேளையில் மூன்றாவது போட்டியில் மேலும் 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : 226/6 டூ 242 ஆல் அவுட்.. அடக்கிய நியூஸிலாந்துக்கு மெகா ட்விஸ்ட் கொடுத்த தெ.ஆ இளம் படை
அந்தவகையில் ஷ்ரேயாஸ் ஐயக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் அறிமுகமாவது உறுதி என்று கூறப்படுகிறது. அதோடு கடந்த சில போட்டிகளாகவே பேட்டிங்கில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் விக்கெட் கீப்பர் கே.எஸ் பரத்திற்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக துருவ் ஜுரேலுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி நாளைய மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் 2 வீரர்களுக்கு அறிமுகமாக வாய்ப்பு கிடைக்க உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.