
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாலமாக துவங்க உள்ளது. அந்தத் தொடரில் எம்.எஸ். தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளது ரசிகர்களிடம் வழக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்காக 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் ஓய்வுக்குப் பின் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
தற்போது 43 வயதை கடந்து விட்டதால் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்துள்ள தோனி விக்கெட் கீப்பராக மட்டுமே விளையாடி வருகிறார். கடந்த வருடம் முழங்கால் வலியால் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்த அவர் வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் அதிரடியாக விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தார்.
அந்த வரிசையில் இந்த வருடமும் விளையாட உள்ள அவர் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறலாம் என்ற சூழ்நிலையில் இருக்கிறார். எனவே இந்த வருடம் கோப்பையை வென்று தோனி வெற்றிகரமாக விடைபெற வேண்டும் என்பது சிஎஸ்கே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் பெரும்பாலான இந்திய வீரர்களைப் போல் தாமும் ஒருநாள் தோனியை பார்க்க வேண்டும் என்று கனவு கண்டதாக ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
தற்போது கிரிக்கெட்டில் விளையாடுவதால் அந்த வாய்ப்பு தமக்கு அடிக்கடி கிடைப்பதாக சாம்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் ஷார்ஜாவில் சிஎஸ்கே அணிக்கு எதிரானப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பின் தோனியுடன் தமது நட்பு சிறப்பாக வளர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சாம்சன் பேசியது பின்வருமாறு.
“ஒவ்வொரு இளம் இந்திய வீரர்களைப் போல நானும் எம்எஸ் தோனியை சுற்றியிருக்க வேண்டும் என்று விரும்பினேன். சிஎஸ்கே அணிக்கு எதிராக ஒவ்வொரு முறை விளையாடும் போதும் தோனியுடன் உட்கார்ந்து பேசி அவர் எப்படி விஷயங்களை செய்கிறார் என்பதை கேட்க விரும்புகிறேன். அது எனக்கு கனவாக இருந்தது”
இதையும் படிங்க: பாண்டியாவை விட அப்துல் ரசாக் தான் பெஸ்ட் ஆல் ரவுண்டர்.. இதனால் மறைஞ்சு போய்ட்டாரு.. ஹபீஸ் கருத்து
“ஒருமுறை சிஎஸ்கே அணிக்கு எதிராக சார்ஜாவில் ஒரு வழியாக நான் சிறப்பாக விளையாடி 70 – 80 ரன்கள் அடித்து போட்டியை வென்று ஆட்டநாயகன் விருதையும் வென்றேன். அதன் பின் மஹி பாயை சந்தித்தேன். அப்போதிலிருந்து எங்களுடைய உறவு வளர்ந்தது. நேற்று அவரை மீண்டும் சந்தித்தேன். ரோல் மாடலாக நினைத்த ஒருவருடன் தற்போது ஒன்றாக அமர்ந்து நிகழ்ச்சி மற்றும் விளம்பரங்களில் கலந்து கொள்கிறேன். இவை அனைத்தும் எனது கனவில் வாழ்வதைப் போன்ற உணர்வை கொடுக்கிறது. அதற்காக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்” என்று கூறினார்.