இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதில் டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் சமீபத்திய வங்கதேச டி20 தொடரில் சதத்தை அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பராக அவர் சாதனை படைத்தார்.
அடுத்ததாக நடைபெற்ற தென்னாப்பிரிக்க தொடரிலும் சதத்தை அடித்த அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அந்த வகையில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுத்தால் அசத்துவேன் என்பதை சாம்சன் நிரூபித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் 2015இல் அறிமுகமான அவருக்கு எப்போதும் இந்திய அணியில் நிலையான சரியான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதில்லை.
யுவராஜ் போல:
இந்நிலையில் யுவராஜ் சிங் போல அசால்டாக தேவையான நேரத்தில் சிக்ஸர்களை அடிக்கும் திறன் சாம்சனிடம் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் பாராட்டியுள்ளார். மேலும் சாம்சன் ஒரு வழியாக தற்போது தொடர்ந்து அசத்துவதை பார்ப்பது தமக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்தது பின்வருமாறு.
“தற்சமயத்தில் பெறும் வெற்றிக்கான ஆசீர்வாதத்தை அவர் பெற்றுள்ளதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. அவர் இந்திய அணியில் நீண்ட காலமாக இருந்து வந்தார். தற்போது அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைத்ததால் நல்ல ரன்கள் கிடைத்துள்ளன. ஏனெனில் ஒவ்வொரு வீரருக்கும் தொடர்ந்து 3 – 4 வாய்ப்புகள் கிடைத்தால் அது அவர்கள் சுதந்திரமான மனதுடன் விளையாட வைக்க உதவும்”
சாம்சனுக்கு பாராட்டு:
“மேல் வரிசையில் பேட்டிங் செய்யும் சாம்சன் சூழ்நிலைகளை பற்றி கவலைப்படுவதில்லை. ஃபீல்டர்கள் பவுண்டரிக்கு அருகே நிறுத்தப்பட்டால் அவர் சிக்சர்களை எளிதாக அடிக்கக் கூடியவர். யுவராஜ் சிங்கிற்கு பின் யாரேனும் ஒரு இந்திய பேட்ஸ்மேன் தொடர்ச்சியாக இவ்வளவு சுலபமாக சிக்சர்களை அடிக்கிறார் என்றால் அது சஞ்சுவாக இருக்க வேண்டும்”
இதையும் படிங்க: இன்னும் 5 விக்கெட் போதும்.. டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக அர்ஷ்தீப் சிங் – நிகழ்த்தவுள்ள சாதனை
“அவர் அனைத்து புறங்களிலும் நெருப்பாக விளையாடுவதை பார்ப்பது விருந்தாக இருக்கும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாம்சன் தேர்வாக கணிசமான வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை அந்த வாய்ப்பில் அசத்தினால் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு அவர் தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.