
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜாம்பவான் இந்திய வீரர் ராகுல் டிராவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவுக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தலா 10,000 ரன்கள் அடித்த அனுபவம் கொண்ட அவர் 2016 முதல் அண்டர்-19, இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
அதே காலகட்டத்தில் என்சிஏ இயக்குனராகவும் செயல்பட்ட ராகுல் டிராவிட் 2021 முதல் சீனியர் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டார். அவருடைய வழிகாட்டுதலில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது. அந்த வெற்றியுடன் இந்திய அணியிலிருந்து விடைபெற்ற அவர் தற்போது ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
2012, 2013 ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் கேப்டனாக செயல்பட்ட டிராவிட் 2014, 2015 வருடங்களில் அந்த அணியின் இயக்குனராகவும் ஆலோசகராகவும் செயல்பட்டார். அந்த வகையில் தம்முடைய முன்னாள் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக தற்போது அவர் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் 2013ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் சொன்ன வார்த்தைகள் தான் தம்மை இந்தளவுக்கு முன்னேற உதவியதாக ராஜஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ராஜஸ்தான் அணிக்கு வருவதற்கு சில முன்பாக ஜெய்ப்பூரில் அந்த அணியின் முன்னோட்ட முகாம் நடைபெற்றது. அதற்கு என்னை ஸ்ரீசாந்த் பாய் அழைத்துச் சென்றார். அங்கே ராகுல் சார், பேடி அப்டோன் ஆகியோர் இருந்தனர். அதற்கு முன்பாக நான் கொல்கத்தா அணியின் முன்னோட்ட முகாமிற்கு சென்றேன்”
“அங்கே பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் ராஜஸ்தான் அணியில் எனக்கு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருந்தது. குறிப்பாக அங்கு என்ன நடக்கும்? எம்மாதிரியான வீரர்களை ராஜஸ்தான் எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது. அந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் அணியின் முகாமில் 2 நாட்கள் பங்கேற்றேன். அன்றைய நாளில் என்னுடைய ஆட்டத்தை பார்த்து விட்டு “நீங்கள் ஏதோ சிறப்பாக செய்கிறீர்கள் எங்களுடைய அணிக்காக விளையாடுகிறீர்களா?” என்று ராகுல் டிராவிட் சொன்னார்”
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் விசித்திரமான சாதனையை நிகழ்த்திய இங்கிலாந்து கேப்டன் ஒல்லி போப் – விவரம் இதோ
“அவருடைய வார்த்தைகள் எனக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது. ஏனெனில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் லெஜெண்ட். அவரைப் போன்ற ஒருவர் ராஜஸ்தான் அணியில் விளையாடுவதற்கு போதுமானதாக இருக்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக நான் போதுமானதாக இருப்பேன்” எனக் கூறினார்.