கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் 2015ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்காக விளையாடி வருகிறார். 2021 வரை தொடர்ச்சியாக வாய்ப்புகளைப் பெறாத அவர் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தவில்லை. அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவருக்கு புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வந்ததும் ஓப்பனிங் இடத்தில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தார்.
அந்த வாய்ப்பில் 3 சதங்கள் அடித்த சாம்சன் ஒருவழியாக சிறப்பாக விளையாடி இந்திய அணியில் தமக்கான இடத்தைப் பிடித்தார். அடுத்ததாக நடைபெறும் 2025 ஆசியக் கோப்பையில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் பெஞ்சில் அமர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுப்மன் கில் அவருடைய ஓப்பனிங் இடத்தில் விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.
அப்படியே வழங்கிய சாம்சன்:
இதற்கிடையே கேரளாவில் கேரள பிரிமியர் லீக் டி20 2025 தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் கொச்சி அணிக்காக 26.80 லட்சம் என்ற பெரிய தொகைக்கு சாம்சன் வாங்கப்பட்டார். அந்த அணிக்காக ஓப்பனிங்கில் களமிறங்கி மிரட்டலாக விளையாடிய அவர் 5 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 368 ரன்கள் குவித்து அசத்தினார். இருப்பினும் ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்ட அவர் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாக கொச்சி அணியிலிருந்து வெளியேறினார்.
மறுபுறம் சஞ்சு சாம்சன் தம்பி ஷாலி சாம்சன் தலைமையில் தொடர்ந்து அசத்திய கொச்சி அணி 2025 கேரளா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்நிலையில் கோப்பையை வென்ற தங்களுடைய கொச்சி அணிக்கு சாம்சன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்ற தம்முடைய தம்பிக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் பாராட்டு:
அத்துடன் ஏலத்தில் தமக்கு கொடுக்கப்பட்ட சம்பளத் தொகையை கொச்சி அணியின் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு பரிசாக வழங்குவதாகவும் சாம்சன் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் படி 26.80 பரிசுத்தொகையை அப்படியே தம்முடைய அணிக்கு சாம்சன் பரிசாக வழங்கியுள்ளார் என்றே சொல்லலாம். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் கேப்டனாக விளையாடும் அவர் 18 கோடிகளை பெறுகிறார்.
இதையும் படிங்க: ஜஸ்ப்ரீத் பும்ரா இல்ல.. டி20 கிரிக்கெட்ல இந்த பவுலர் தான் பீக் பார்ம்ல இருக்காரு – ரவி சாஸ்திரி கருத்து
எனவே தம்முடைய மாநிலத்தில் நடைபெறும் தொடரின் சம்பளத்தை அவர் சக வீரர்களுக்கு சிறிய ஊக்கத்தொகைப் பரிசாக வழங்கியுள்ளார் என்றே சொல்லலாம். அவருடைய இந்த செயலை பார்த்து என்னா மனுஷன்யா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகின்றனர். அவருக்கு 2025 ஆசியக் கோப்பையில் இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள்.



