
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது ஜூலை-27 ஆம் தேதியான இன்று பல்லகல்லே நகரில் துவங்க இருக்கிறது. டி20 உலக கோப்பை தொடரில் பெற்ற வெற்றி, அதற்கடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வெற்றி என அடுத்தடுத்து வெற்றிகளை குவித்துள்ள இந்திய அணி தற்போது இலங்கை அணியையும் வீழ்த்த முழுவீச்சில் தயாராகியுள்ளது.
அதேவேளையில் டி20 உலக கோப்பை தொடரில் மோசமான தோல்வியை சந்தித்த இலங்கை அணியானது அந்த தோல்வியிலிருந்து மீளும் வகையில் இந்திய அணியை வீழ்த்த காத்திருக்கிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் மீண்டும் ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளதால் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் விளையாடுவாரா? அல்லது ரிஷப் பண்ட் விளையாடுவாரா? என்பது பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது. ஆனாலும் சஞ்சு சாம்சன் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கே கம்பீர் முன்னுரிமை அளிப்பார் என்றும் தெரிகிறது.
இந்நிலையில் சஞ்சு சாம்சன் இன்றைய போட்டியில் விளையாடும் பட்சத்தில் அவர் எந்த பவுலருக்கு எதிராக சூதானமாக விளையாட வேண்டும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இலங்கை மண்ணில் அதிகளவிலான போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாத சஞ்சு சாம்சன் ஹசரங்காவிற்கு எதிராக சற்று கவனமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கருத்துக்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் இதுவரை ஹசரங்காவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் 11 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ள சஞ்சு சாம்சன் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து 3 முறை அவரிடம் ஆட்டமிழந்துள்ளார். இதன் காரணமாக ஹசரங்காவின் பந்துவீச்சில் அவர் கவனமாக விளையாட வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க : ஜோ ரூட் இதை செஞ்சா மட்டுமே.. சச்சின் டெண்டுல்கர் உலக சாதனையை உடைக்க வாய்ப்பிருக்கு.. டிகே பேட்டி
அதேபோன்று மற்றொரு பந்துவீச்சாளரான மகேஷ் தீக்ஷனா 2023-ஆம் ஆண்டிற்கு பிறகு பவர்பிளவில் 7 ரன்களுக்கு கீழ் கொடுத்துள்ளதால் அந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களையும் அவர் பார்த்து விளையாட வேண்டியது அவசியம் என்று தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.