இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த 2012இல் அறிமுகமான அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். அதனால் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருடன் அவரும் தலைசிறந்த டாப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
சொல்லப்போனால் அந்த நால்வரில் 10000 டெஸ்ட் ரன்கள் அடித்த முதல் வீரராகவும் ஜோ ரூட் சமீபத்தில் சாதனை படைத்தார். அந்த சூழ்நிலையில் இதுவரை 143 போட்டிகளில் 11940 ரன்களை குவித்துள்ள அவர் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதனால் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை அவர் முடியிரிப்பார் என்று சமீபத்தில் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார்.
சாதனைக்கு வாய்ப்பிருக்கு:
குறிப்பாக 200 போட்டிகளில் 15921 ரன்கள் அடித்துள்ள சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக உலக சாதனை படைத்துள்ளார். தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள ஜோ ரூட் இன்னும் 4 – 5 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த 4 – 5 வருடங்களில் அவர் 5000 ரன்களை அடித்தால் மட்டுமே சச்சின் டெண்டுல்கரை முந்த முடியும்.
இந்நிலையில் மிகச் சிறந்த வீரராக செயல்பட்டு வரும் ஜோ ரூட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சாதனையை உடைக்க வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். குறிப்பாக காயங்களை சந்திக்காமல் ஃபிட்டாக இதே ஃபார்மில் அடுத்த 6 சீசன்களில் 4000 – 5000 ரன்களை அடித்தால் சச்சினை முந்தி ரூட் சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“152 (143) டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரூட் 11000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகளில் விளையாடியுள்ளார். எனவே அவரை தொடுவதற்கு அடிப்படையில் ஜோ ரூட்டுக்கு இன்னும் 48 போட்டிகள் தேவை. அதற்கு குறைந்தது 6 சீசன்கள் விளையாடுவது அவசியம். அந்த 6 சீசன்களில் அவரால் இன்னும் 4000 – 5000 ரன்களை நெருங்க முடியும்”
இதையும் படிங்க: தோனி தான் எனக்கு பவுலிங்கில் அந்த விஷயத்தை கற்று கொடுத்தார்.. அவரு கிரேட் – மஹீஸ் தீக்ஷனா நெகிழ்ச்சி
“அதற்கு சாத்தியம் உள்ளதா? ஜோ ரூட் அற்புதமான வீரர். இருப்பினும் இந்த சாதனையை செய்வதற்கு அவர் அடுத்த 6 வருடங்கள் தொடர்ந்து ஃபிட்டாக இருக்க வேண்டும். அவர் தன்னுடைய கேரியரை 39 வயதில் முடிப்பதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறினார். இருப்பினும் சச்சின் சாதனையை இந்தியரை தவிர்த்து மற்றவர் உடைக்கக் கூடாது என்பதே பெரும்பாலான இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.



