74, 119, 55, 55, 82 ரன்ஸ்.. ராஜஸ்தானுக்காக ஓப்பனிங்கில் மிரட்டிய சஞ்சு சாம்சன்.. பட்லர், ரகானே சாதனை சமன்

Sanju Samson
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 24 ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு தடுமாற்றமாக விளையாடிய ஜோஸ் பட்லர் 11 ரன்களில் அவுட்டானார்.

அதே போல மறுபுறம் நல்ல ஃபார்மில் இருக்கும் ஜெய்ஸ்வால் அதிரடியாக 24 (12) ரன்கள் எடுத்தும் மோசின் கான் வேதத்தில் ஆட்டமிழந்தார். அதனால் 49/2 என தடுமாறிய ராஜஸ்தானுக்கு அடுத்ததாக கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்கள். அதில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் அரை சதமடித்து அசத்தினார்.

- Advertisement -

5வது வருடமாக:
அவருடன் தனது பங்கிற்கு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியன் பராக் 3வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது 43 (29) ரன்களில் அவுட்டானார். குறிப்பாக கடந்த வருடங்களில் சுமாராக விளையாடியதால் கிண்டல்களுக்கு உள்ளான அவர் இந்த போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்து அசத்தினார். அதைத் தொடர்ந்து வந்த சிம்ரோன் ஹெட்மர் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் எதிர்ப்புறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் கடைசி வரை அவுட்டாகாமல் 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 82* (52) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் கடைசி நேரத்தில் இளம் வீரர் துருவ் ஜுரேல் தன்னுடைய பங்கிற்கு 20* (12) ரன்கள் அதிரடியாக அடித்து கை கொடுத்ததால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 193/4 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

லக்னோ சார்பில் நவீன்-உல்-ஹக் 2, மோசின் கான் 1, ரவி பிஷ்னோய் 1 விக்கெட் எடுத்தனர். அதை விட இந்தப் போட்டியில் எடுத்த 82* ரன்களையும் சேர்த்து கடந்த 5 ஐபிஎல் தொடர்களின் முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து அசத்தியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. அதாவது 2020, 2021, 2022, 2023 ஆகிய கடைசி 4 சீசன்களில் ராஜஸ்தான் விளையாடிய முதல் போட்டியில் முறையே சென்னை, பஞ்சாப், ஹைதெராபாத், ஹைதெராபாத் அணிகளுக்கு எதிராக அவர் 74, 119, 55, 55 ரன்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: 510 ரன்ஸ்.. 42/5 என திணறல்.. வங்கதேசத்தை சொந்த ஊரில் 3 நாளாக வெச்சு செய்த இலங்கை ஜோடி 2 வரலாற்று சாதனை

அந்த வரிசையில் தற்போது 2024 சீசன் முதல் போட்டியிலும் லக்னோவுக்கு எதிராக அவர் 82* ரன்கள் அடித்துள்ளார். அது போக ராஜஸ்தான் அணிக்காக அதிக முறை ஒரு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர் என்ற ஜோஸ் பட்லர், ரஹானே ஆகியோரின் சாதனையையும் சஞ்சு சாம்சன் சமன் செய்தார். இந்த மூவருமே ராஜஸ்தானுக்காக இதுவரை அதிகபட்சமாக 23 முறை 50+ ரன்கள் அடித்துள்ளனர்.

Advertisement