
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது புள்ளிபட்டியலில் ஒன்பதாவது இடத்தினை பிடித்து வெளியேறியிருந்தது. இதன் காரணமாக அந்த அணியின் ரசிகர்கள் ஏமாற்றத்தை சந்தித்திருந்தனர். அதோடு கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக செயல்பட்டு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஆண்டு இப்படி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அந்த அணியின் நிர்வாகத்தின் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதோடு இந்த தொடரின் பல போட்டிகளில் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடாததால் ரியான் பராக் தற்காலிக கேப்டனாக செயல்பட்டிருந்தார். இவ்வேளையில் இனிவரும் சீசன்களில் தொடர்ந்து ரியான் பராக்கை கேப்டனாக நியமிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகம் நினைப்பதால் சஞ்சு சாம்சன் அதிருப்தியில் இருப்பதாகவும் பேசப்பட்டது.
அதுமட்டுமின்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேற இருக்கும் அவர் சென்னை அணிக்காகவும் டிரேடிங் செய்யப்படுவார் என்றெல்லாம் சில கருத்துக்கள் உலாவி வந்தன. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் சார்பில் வெளியான அறிவிப்பில் :
சஞ்சு சாம்சன் எங்கும் செல்லவில்லை என்றும் தங்களது அணியில் தான் தொடர்ந்து விளையாடுவார் என்றும் உறுதி செய்திருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவலின் படி சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் நீடிக்க விரும்பவில்லை என்றும் அடுத்த ஆண்டு மினி ஏலத்திற்கு முன்னதாக தன்னை விடுவிக்குமாறு நிர்வாகத்திடம் அவர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஒருவேளை அப்படி அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் அவரை ஏலத்திற்கு முன்பாகவே மிகப்பெரிய தொகைக்கு மற்ற அணிகள் தங்களது அணிக்கு தேர்வு செய்ய போட்டி போடும் என்று தெரிகிறது. அதனால் சஞ்சு சாம்சன் பெரிய தொகைக்கும் செல்வார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயத்தால் 2 முக்கிய தொடர்களை தவறவிடும் ரிஷப் பண்ட் – வெளியான தகவல்
ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக மன வருத்தத்தில் இருந்த சஞ்சு சாம்சன் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படும் வேளையில் அவரது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களும், உறவினர்களும் அதை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.