
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக கடைசிப் போட்டியில் இலங்கையை சூப்பர் ஓவரில் தோற்கடித்த இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. அதனால் புதிய கேப்டன் சூரியகுமார் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் டி20 கிரிக்கெட்டில் இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.
இருப்பினும் இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். 2015ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவருக்கு இதுவரை இந்திய அணியில் நிலையாக 10 போட்டிகளில் கூட தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது நிதர்சனமாகும். ஆனால் மறுபுறம் தமக்கு கிடைக்கும் பெரும்பாலான வாய்ப்புகளை அவர் பயன்படுத்திக் கொள்வதில்லை என்பதும் மிகப்பெரிய உண்மையாகும்.
சொதப்பிய சாம்சன்:
அதற்கு எடுத்துக்காட்டாக இத்தொடரில் முதல் போட்டியில் வாய்ப்பு பெறாத அவர் 2வது போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி கோல்டன் டக் அவுட்டானார். அதே போல 3வது போட்டியிலும் டக் அவுட்டான சஞ்சு சாம்சன் இதுவரை இலங்கை மண்ணில் மொத்தம் 5 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 27, 7, 0, 0, 0 என்பதே அவருடைய ஸ்கோராகும்.
இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் 3 முறை டக் அவுட்டான முதல் வீரர் என்ற மோசமான உலக சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். அது ஒருபுறமிருக்க 3வது போட்டியில் விக்கெட் கீப்பராக அவர் 3 கேட்ச்களை கோட்டை விட்டார். குறிப்பாக 12 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை சஞ்சு சாம்சன் கோட்டை விட்டதை பயன்படுத்திய குசால் மெண்டிஸ் 43 ரன்கள் அடித்தார்.
எனவே ஒருவேளை 3வது போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தால் அதற்கு சஞ்சு சாம்சன் முக்கிய காரணமாக இருந்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த சூழ்நிலையில் சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் அசத்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தொடர்நாயகன் விருது வென்றார். ஆனால் தொடர்நாயகன் விருது வென்று அவருக்கே அடுத்ததாக நடைபெற்ற இலங்கை தொடரில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் 3 போட்டிகளிலும் முழுமையாக வாய்ப்பு கொடுக்கவில்லை.
இதையும் படிங்க: அவங்கள செலக்ட் பண்றதை கஷ்டம்.. ஆனா ஜஸ்ப்ரித் பும்ரா தான் எனக்கு பிடிச்ச பவுலர்.. தல தோனி பேட்டி
அப்படிப்பட்ட சூழ்நிலையில் சஞ்சு சாம்சன் இந்த தொடரில் கிடைத்த வாய்ப்பில் மோசமான உலக சாதனையை படைத்து மெகா சொதப்பலை அரங்கேற்றியுள்ளார். எனவே வருங்காலங்களில் 30 வயதாகும் சஞ்சு சாம்சனுக்கு டி20 கிரிக்கெட்டில் கம்பீர் தொடர்ச்சியான வாய்ப்பு கொடுப்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரியான் பராக், ரிங்கு சிங் போன்றவர்கள் ஆல் ரவுண்டர்களாக உருவெடுத்து தங்கள் வாய்ப்பை அதிகரித்துள்ளனர்.