ஆண்டுதோறும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருவதைப் போன்று தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகத்தின் மூலமாக தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் 6-வது சீசனானது நேற்று துவங்கியது. அதன்படி இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் விளையாடிய நெல்லை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது. பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் 184 ரன்கள் குவித்தது. இதனால் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று சூப்பர் ஓவரில் நெல்லை அணி சேப்பாக் அணியை வீழ்த்தி முதல் போட்டியிலேயே திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நெல்லை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஒற்றை ஆளாக சஞ்சய் யாதவ் திகழ்ந்தார் என்றே கூற வேண்டும். ஏனெனில் நெல்லை அணி பேட்டிங் செய்ய ஆரம்பிக்கையில் பிரதோஷ் பால் 7 ரன்களிலும், அபரஜித் 2 ரன்களிலும், இந்திரஜித் 3 ரன்களிலும் ஆட்டம் இழக்கவே 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நெல்லை அணி தவித்தது.

அதன் பின்னர் களமிறங்கிய சஞ்சய் யாதவ் 47 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் என 87 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததால் நெல்லை அணி பெரிய ஸ்கோருக்கு சென்றது. அதேபோன்று பந்து வீச்சிலும் 4 ஓவர்களை வீசிய அவர் 27 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இப்படி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
அதோடு சஞ்சய் யாதவ் குறித்து ஒரு சுவாரசியமான விடயமும் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே பல சீசன்களாக அவர் தமிழக பிரீமியர் லீக்கில் விளையாடி இருந்தாலும் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 20 லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் இருந்து 50 லட்ச ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட இவர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே மும்பை அணியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருந்தார்.
இதையும் படிங்க : கடைசி 2 வருஷமா நான் கிரிக்கெட் விளையாடம ஒதுங்கி இருந்ததுக்கு இதுதான் காரணம் – முரளி விஜய் பேட்டி
அந்த போட்டியிலும் 2 ஓவர்கள் வீசி 23 விக்கெட்டுகளை விட்டுக் கொடுத்ததால் அவருக்கு அதற்கடுத்து வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலுமே தனது திறமையை நிரூபித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்திற்கு சஞ்சய் யாதவ் ஆச்சரியத்தை அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



