
ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் 5 ஆட்டங்களில் 4 தோல்விகளை பெற்று இந்த தொடரின் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருந்தது. அதன்பிறகு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக தங்களது வெற்றி பயணத்தை துவங்கிய அவர்களுக்கு தொட்டதெல்லாம் தங்கம் என்பது போன்று ஏறுமுகமாகவே அமைந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக டெல்லி அணிக்கு எதிராக பெற்ற வெற்றியை தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் என அனைத்து அணிகளையும் நொறுக்கி தொடர்ச்சியான ஆறு வெற்றிகளை பெற்றது. இதனால் தற்போதைய நிலையில் 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
இதன் காரணமாக இந்த தொடரின் ஆரம்பத்தில் ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது பிளே ஆப் வாய்ப்புக்கான போட்டியில் உள்ளது. மேலும் ஏற்கனவே கடந்த காலங்களில் இதேபோன்று தொடரினை மெதுவாக ஆரம்பித்து பின்னர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது அதே வழியில் இந்த ஆண்டும் கோப்பையை வெல்லும் என்று பலராலும் பேசப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரின் ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாற்றத்துடன் துவங்கி இருந்தாலும் தற்போது நிலையான ஒரு அணியாக பலமான ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது என முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவ் தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் உள்ளார். அதேபோன்று ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரோகித் சர்மா என சமீபத்தில் ஃபார்மில் இல்லாத நட்சத்திர வீரர்கள் அனைவரும் மீண்டும் பிரகாசிக்க துவங்கியுள்ளனர்.
அதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வலிமை பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷேன் வாட்சன், மைக் ஹசி போன்ற வீரர்கள் முக்கிய தருணங்களில் போட்டியை மாற்றும் வீரர்களாக இருந்தனர். அதேபோன்று தற்போதைய மும்பை வீரர்கள் முக்கியமான போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு சூரியகுமார் யாதவ் பேட்டிங் மிகச் சிறப்பாக இருந்து வருவதால் அவர்களுக்கு பலம் கூடியுள்ளது.
இதையும் படிங்க : பீக் பார்ம்ல இருக்கும்போது விராட் கோலி இந்த முடிவை எடுத்தது ஆச்சரியமா இருக்கு – சவுரவ் கங்குலி கருத்து
அதேபோன்று பந்துவீச்சு துறையிலும் நல்ல கலவை இருப்பதால் மும்பை அணி இனியும் இந்த தொடரில் ஏற்றத்தை மட்டுமே சந்திக்கும் என்று நினைக்கிறேன். வெளிநாட்டு வீரர்கள் விலகினாலும் தற்போதைய மும்பை அணியில் உள்ள வீரர்களை வைத்தே இந்த தொடரை சமாளிக்கும் அளவிற்கு அவர்களிடம் பலம் உள்ளதாக சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.