விராட் கோலி 49, 100 சதங்களை ஈஸியா அடிச்சாலும் அதுல சச்சினை மிஞ்சுவது ரொம்ப கஷ்டம் – மஞ்ரேகர் அதிரடி

- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்றுள்ள இந்திய கிரிக்கெட் 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரையும் வென்று 2023 புத்தாண்டை வெற்றியுடன் துவக்கிய இந்தியா அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தையும் வெற்றியுடன் துவக்கியுள்ளது. இந்த பயணத்தில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் கடந்த 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்திய பேட்டிங்கின் தூணாக உருவெடுத்துள்ள நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Kohli

- Advertisement -

ஏனெனில் 31 வயதிலேயே 70 சதங்களை விளாசி தன்னை ஜாம்பவானாக நிரூபித்த விராட் கோலி பகலானால் இரவு வரும் என்ற இயற்கையின் நியதிக்கேற்ப 2019க்குப்பின் சரிவை சந்தித்து அடுத்த சந்தத்தை அடிக்க முடியாமல் தடுமாறினார். அதற்காக அணியிலிருந்து நீக்குமாறு நிறைய முன்னாள் வீரர்கள் போர்க்கொடி உயர்த்திய போதும் மனம் தளராமல் போராடிய அவர் 2022 ஆசிய கோப்பையில் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து பார்முக்கு திரும்பி அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார்.

அது தான் சவால்:
அதைத்தொடர்ந்து கடந்த மாதம் வங்கதேச மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் சதமடித்த அவர் 2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக களமிறங்கிய முதல் போட்டியிலும் சதமடித்து முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளார். மேலும் மொத்தமாக 73 சதங்களை அடித்துள்ள அவர் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் 45 சதங்களை அடித்துள்ள அவர் இந்த வருடத்துக்குள்ளேயே சச்சினின் 49 சதங்கள் சாதனையை தூளாக்குவார் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இந்நிலையில் ஆரம்பகால முதலே ஒருநாள் கிரிக்கெட்டில் அற்புதமாக செயல்பட்டு வரும் விராட் கோலி 49 சதங்களைத் தாண்டி மொத்தமாக 100 சதங்களை அடித்தாலும் கிரிக்கெட்டின் உயிர்நாடியாக கருதப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினின் 51 சதங்கள் சாதனையை முறியடிப்பது மிகவும் கடினமென்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சச்சினை எளிதாக தாண்டி விடலாம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினை தாண்டுவதற்கு விராட் கோலி மிகப்பெரிய மலையேற வேண்டும். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி எப்போதுமே மிகச் சிறந்த வீரர் என்பதை சந்தேகமில்லை. அதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மிகச் சிறந்தவர் அல்ல என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் சச்சின் டெண்டுல்கரின் உண்மையான மகத்துவம் அவருடைய 51 டெஸ்ட் சதங்களில் தான் உள்ளது”

Sanjay

“எனவே விராட் கோலிக்கு உண்மையான சவால் அதை மிஞ்சுவதில் தான் உள்ளது. இருப்பினும் ஒருநாள் போட்டிகளைப் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் கோலி அதை நோக்கி பயணிப்பார் என்று நம்புகிறேன்” என கூறினார். அவர் கூறுவது போல இன்னும் நான்கைந்து சதங்களை அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினை இந்த வருடமே விராட் கோலி முந்துவதற்கு 99% வாய்ப்புள்ளது. ஆனால் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களை மட்டுமே விளாசியுள்ள விராட் கோலி சச்சினை தொடுவதற்கு இன்னும் 22 சதங்கள் தேவைப்படுகிறது.

இதையும் படிங்க: நெருங்கியும் அதிர்ஷ்டமில்லை, கடவுள் நல்ல வழியை காட்டணும் – இந்திய அணி வாய்ப்பு பற்றி நடராஜன் பேசியது என்ன

எனவே 34 வயதை கடந்துள்ள அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினை மிஞ்சி சாதனை படைப்பது மிகவும் சவாலானதாகவே பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் பார்முக்கு திரும்பிய பின் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதற்குள் 3 சதங்களை அடித்து விட்ட அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை. எனவே சச்சினை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் முந்துவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement