
இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்ற வருகிறது. அதில் ஏற்கனவே தொடரை வென்று சாதனை படைத்த நியூஸிலாந்து முதலில் பேட்டிங் செய்து 235 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வில் எங் 82, டேரில் மிட்சேல் 71 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5, வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி மிகவும் போராடி 263 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 90, ரிஷப் பண்ட் 60, ஜெய்ஸ்வால் 30 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு கை கொடுத்தனர். நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி மீண்டும் பேட்டிங் செய்து வருகிறது.
முன்னதாக இந்தப் போட்டியில் இளம் வீரர் சர்பராஸ் கான் 8வது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கியது ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் தனது முதல் 3 போட்டிகளிலும் அரை சதம் அடித்த அவர் இதே நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 150 ரன்கள் குவித்து அசத்தினார். அந்த வகையில் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் ரிஷப் பண்ட் அவுட்டானதும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா களமிறங்கி 14 ரன்களில் அவுட்டாகி சென்றார். அதைத்தொடர்ந்து 8வது இடத்தில் களமிறங்கிய சர்பராஸ் கான் 4 பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இந்நிலையில் சர்பராஸ் கானை 8வது இடத்தில் விளையாட வைத்தது மிகவும் தவறான முடிவு என ரோகித் சர்மா மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோரை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தனது முதல் 3 போட்டிகளில் 3 அரை சதங்கள் அடித்து பெங்களூருவில் 150 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் உள்ள இந்த பையன் ஸ்பின்னர்களை நன்றாக எதிர்பார்க்கக் கூடியவர். அப்படிப்பட்ட சர்பராஸ் கான் இடது – வலது கை வேண்டும் என்பதற்காக 8வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தது இந்தியாவின் மோசமான முடிவு” என்று கூறினார்.
இதையும் படிங்க: 103 ரன்ஸ்.. காப்பாற்றிய சாய் சுதர்சன்.. 3 நாட்டில் 3 சதம்.. ஆஸியை இந்தியா ஏ போராடி வீழ்த்துமா?
அதே போல மற்றொரு முன்னாள் இந்திய வீரர் மதன் லால் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சர்பராஸ் கான் ஏன் லோயர் மிடில் ஆர்டரில் அனுப்பப்பட்டார்? ஒருவேளை ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாது என்று கருதினால் அவர் விளையாடவே கூடாது. இது அவருடைய தன்னம்பிக்கையை வீணாகலாம்” என்று கூறினார்.