ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா ஏ அணி 2 போட்டிகள் கொண்ட பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 31ஆம் தேதி மெக்காய் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ சுமாராக பேட்டிங் செய்து 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக தேவ்தூத் படிக்கல் 36, நவ்தீப் சைனி 23, சாய் சுதர்சன் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு அதிகபட்சமாக ப்ரண்டன் டோகேட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணியை போராடி 195 ரன்களுக்கு இந்தியா ஏ அணி சுருட்டியது. அதிகபட்சமாக கேப்டன் மெக்ஸ்வீனி 39, கூப்பர் கோன்லி 37 ரன்கள் எடுத்தனர்.
சாய் சுதர்சன்:
இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 6, பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கியஇந்தியா ஏ அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் 12, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் தேவ்தூத் படிக்கல் ஆகியோர் நிதானமாக விளையாடி கை கொடுத்தார்கள்.
3வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியா ஏ அணியை காப்பாற்றிய அந்த ஜோடியில் படிக்கல் அரை சதமடித்து 88 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய சாய் சுதர்சன் 9 பவுண்டரியுடன் சதமடித்து 103 ரன்கள் விளாசி அவுட்டானார். சமீபத்தில் இங்கிலாந்தில் கவுண்ட்டி தொடரில் சதமடித்த அவர் 2024 ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக டெல்லியில் இரட்டை சதமடித்தார்.
இந்தியா வெல்லுமா:
அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவில் சதத்தை பதிவு செய்துள்ள சுதர்சன் சில மாதங்களுக்குள் 3 வெவ்வேறு நாடுகளில் 3 சதங்கள் அடித்து நல்ல ஃபார்மில் ஜொலித்து வருகிறார். ஆனால் அடுத்து வந்த வீரர்களில் இசான் கிசான் 32, நிதிஷ் ரெட்டி 17 ரன்களில் அவுட்டானதால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா ஏ 312 ரன்கள் குவித்து அவுட்டானது.
இதையும் படிங்க: 36 பந்தில் 50.. இந்தியா முன்னிலை.. முக்கிய நேரத்தில் மிரட்டிய ரிஷப் பண்ட்.. ஜெய்ஸ்வாலை முந்தி உலக சாதனை
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு அதிகபட்சமாக பெர்குஸ் ஓ நெய்ல் 4, டோட் முர்பி 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இறுதியில் 225 ரன்களை துரத்தும் ஆஸ்திரேலியா மூன்றாவது நாள் முடிவில் 139-3 ரன்கள் எடுத்துள்ளது. அதனால் இன்னும் 86 ரன்கள் தேவைப்படும் அந்த அணியின் ஏழு விக்கெட்டுகளை எடுத்து இந்தியா ஏ வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



