36 பந்தில் 50.. இந்தியா முன்னிலை.. முக்கிய நேரத்தில் மிரட்டிய ரிஷப் பண்ட்.. ஜெய்ஸ்வாலை முந்தி உலக சாதனை

Rishabh Pant
- Advertisement -

மும்பையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் ஏற்கனவே தொடரை வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 235 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 82, வில் எங் 71 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 4, ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 18, ஜெய்ஸ்வால் 30, விராட் கோலி 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 86/4 என தடுமாறிய இந்திய அணிக்கு அடுத்ததாக ரிஷப் பண்ட் – சுப்மன் கில் ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடினர். அதில் தம்முடைய ஸ்டைலில் கொஞ்சம் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 60 (59) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் அதிரடி:

அவருடன் சேர்ந்து விளையாடிய சுப்மன் கில் சதத்தை நழுவ விட்டு 90 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 14, சர்பராஸ் கான் 0, அஸ்வின் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி 38* (36) ரன்கள் குவித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

இறுதியில் இந்தியாவை 263 ரன்களுக்கு சுருட்டிய நியூசிலாந்து அணிக்கு அதிகபட்சமாக அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதே சமயம் நியூசிலாந்தை விட இந்திய அணி 28 ரன்கள் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. அதனால் இந்த போட்டியிலாவது இந்தியா வெல்லுமா என்று எதிர்பார்த்து காணப்படுகிறது.

- Advertisement -

தனித்துவமான சாதனை:

முன்னதாக இந்த போட்டியில் 86-4 என இந்தியா தடுமாறிய போது அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 36 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு சரிவை சரி செய்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதிவேகமாக அரை சதமடித்த இந்திய வீரர் என்ற ஜெய்ஸ்வால் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் புனேவில் நடைபெற்ற கடந்த போட்டியில் 41 பந்துகளில் ஜெய்ஸ்வால் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: 90 ரன்ஸ்.. இந்தியாவுக்கு கைகொடுத்த சுப்மன் கில்.. சச்சினுக்கு பின் 13 வருடங்கள் கழித்து பரிதாப சாதனை

இது போக தனது டெஸ்ட் கேரியரில் இதுவரை 65 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 66 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தது 50 இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களில் தம்முடைய இன்னிங்ஸை விட அதிக சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார். வேறு யாரும் தாங்கள் விளையாடிய இன்னிங்ஸை விட அதிக சிக்சர்கள் அடித்ததில்லை.

Advertisement