
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ஓய்வுக்குப் பின் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். உண்மையில் கிரிக்கெட்டில் அவர் நிறைய ரன்கள் அல்லது சதங்கள் அடித்து பெரியளவில் அசத்தியதில்லை என்றே சொல்லலாம். ஆனால் வர்ணனையாளராக அவருடைய கருத்துக்கள் மற்றும் நுணுக்கமான பேச்சுக்கள் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.
இருப்பினும் பல நேரங்களில் வர்ணனையைத் தாண்டி அவர் தனிப்பட்ட வீரர்களை வெளிப்படையாகக் கடுமையாக விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் ரவீந்திர ஜடேஜா ஃபிட்ஸ் அண்ட் ஃபீஸஸ் கிரிக்கெட்டர் என்று 2019 உலகக்கோப்பையின் போது அவர் விமர்சித்திருந்தார். அதாவது ஜடேஜா பவுலர் மட்டுமே, முழுமையான மேட்ச் வின்னர் கிடையாது என்று அவர் விமர்சித்திருந்தார்.
அதற்கு “உங்களை விட இரு மடங்கு அதிக போட்டிகளில் விளையாடியுள்ள நான் இப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். எனவே சாதித்த மக்களிடம் மரியாதையை கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய பேச்சுக்களை நான் அதிகம் கேட்டு விட்டேன்” என்று ஜடேஜா ட்விட்டரில் அவருக்கு நெத்தியடி பதிலைக் கொடுத்தார். அத்துடன் 2019 உலகக் கோப்பை செமி ஃபைனலில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அவர் மஞ்ரேக்கர் முகத்தில் கரியையும் பூசினார்.
அதே போல 2025 ஐபிஎல் தொடருக்கு முன்பாக முகமது ஷமி காயமடைந்தார். அதன் காரணமாக ஏலத்தில் அவர் பெரிய தொகைக்கு விலை போக மாட்டார் என்று மஞ்ரேக்கர் தெரிவித்திருந்தார். அதற்கு “ஜெய் பாபா. நீங்கள் உங்களுடைய வருங்காலத்தை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். அது பயனுடையதாக இருக்கும் அல்லவா சஞ்சய் ஜீ. யாருக்காவது வருங்காலத்தைத் தெரிந்து கொள்ள விரும்பினால் சாரை அணுகுங்கள்” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஷமி பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் அது குறித்து சமீபத்திய பேட்டியில் சஞ்சய் மஞ்ரேக்கர் பேசியது பின்வருமாறு. “ஜடேஜா அதை அதிகம் தவறாக புரிந்துகொண்டார் என்று நினைக்கிறேன். ஃபிட்ஸ் ஃபீஸஸ் என்றால் க்ரிஞ்ச் கிரிக்கெட்டர் என்று ஜடேஜா நினைத்தார். அவர் அந்த கருத்தை தவறாக புரிந்துகொண்டார் என்று நினைக்கிறேன். அதே போல நான் சொன்னது குறித்து ஷமிக்கு எந்த ஐடியாவும் இல்லை”
இதையும் படிங்க: 7 ரன்ஸ்.. பயத்தைக் காட்டி சொதப்பிய ஜிம்பாப்வே.. மதுசங்கா மேஜிக் சாதனையில்.. இலங்கை திரில் வெற்றி
“ஷமி அப்படி ரியாக்ட் செய்தார் என்று சிலர் என்னிடம் சொன்னார்கள். அது பற்றிய ஐடியா எனக்கு இல்லை. பொதுவாக என்னுடைய கருத்தை நான் நேர்மையாக சுருக்கமாக சிறப்பாக சொல்ல முயற்சிக்கிறேன். ஆனால் அது உங்களால் தடுக்க முடியாத சுனாமி போல் வந்து விடுகிறது. அது போன்ற சுனாமி கருத்துக்களின் சிறந்த விஷயம் என்னவெனில், 48 மணி நேரம் கழித்து அவர்கள் ஏமாற்றமடைய வேறு எதையாவது கண்டறிகிறார்கள்” என்று கூறினார்