ஜிம்பாவே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அங்கு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 29ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1.00 மணிக்கு ஹராரே நகரில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 50 ஓவரில் சிறப்பாக விளையாடி 298/6 ரன்கள் எடுத்தது.
அந்த அணிக்கு மதுஷ்கா டக் அவுட்டானாலும் பதும் நிசாங்கா நங்கூரமாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். மிடில் ஆடரில் குஷால் மெண்டிஸ் 38, சமரவிக்கிரமா 35 ரன்கள் எடுத்தார்கள். கேப்டன் அசலங்கா 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் லோயர் ஆர்டரில் ஜனித் லியனகே – குசால் மெண்டிஸ் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
பயத்தை காட்டிய ஜிம்பாப்வே:
குறிப்பாக டெத் ஓவர்களில் அடித்து நொறுக்கிய அந்த ஜோடி 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. அதில் குசால் மெண்டிஸ் 57 (36) ரன்கள் அவுட்டான போதிலும் லியனகே வெளுத்து வாங்கி 70* (47) ரன்கள் விளாசி அபார ஃபினிஷிங் கொடுத்தார். ஜிம்பாப்வே அணிக்கு அதிகபட்சமாக ரிச்சர்ட் ங்கரவா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே பிரைன் பெனட், பிரண்டன் டைலர் ஆகியோர் ஆரம்பத்திலேயே அசித்தா பெர்னாண்டோ வேகத்தில் டக் அவுட்டானார்கள். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் பென் கரண் நிதானமாக விளையாடினார். அவருடன் சேர்ந்து 118 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் சீன் வில்லியம்ஸ் அரை சதமடித்து 57 (54) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இலங்கை த்ரில் வெற்றி:
அடுத்து வந்த வேஸ்லே மாதவேர் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் மறுபுறம் அசத்திய கரண் அரை சதத்தை அடித்து 70 ரன்கள் குவித்து பெவலியன் திரும்பினார். மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரம் சிக்கந்தர் ராசா அதிரடியாக விளையாடி ஜிம்பாப்பை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். கூடவே டோனி முன்யோங்கா அசத்தியதால் கடைசி ஓவரில் ஜிம்பாப்வே வெற்றிக்கு வெறும் 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
அதனால் இலங்கை தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி ஓவரை வீசிய மதுசங்கா முதல் பந்திலேயே ராசாவை 92 (87) ரன்களில் அவுட்டாக்கினார். அதோடு நிற்காத அவர் அதற்கடுத்த 2 பந்துகளில் ப்ராட் எவன்ஸ், ங்கரவாவை அடுத்தடுத்து டக் அவுட்டாக்கி ஹாட்ரிக் எடுத்தார். கடைசி 3 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் ஜிம்பாப்வேவை 291/8 ரன்களுக்கு மடக்கி இலங்கையை 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார்.
இதையும் படிங்க: எனக்கே தெரியல.. அப்ரிடி மாதிரி எனக்கு விராட் கோலி தான் லாலா புனைப்பெயரை கொடுத்துருப்பாரு.. ஷமி பேட்டி
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த 8வது இலங்கை பவுலர் என்ற சாதனையும் அவர் படைத்தார். மொத்தம் 4 விக்கெட்டுகள் எடுத்த அவருடன் பெர்னாண்டோவும் 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியில் பங்காற்றினார். மறுபுறம் முன்யோங்கா 43* (52) ரன்கள் எடுத்தும் 49வது ஓவர் வரை இலங்கைக்கு பயத்தைக் காட்டிய ஜிம்பாப்வே கடைசி ஓவரில் சொதப்பி வெற்றியை கோட்டை விட்டது.



