
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான துவக்கத்தைப் பெற்றுள்ளது. அதில் பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இத்தொடரில் நடப்புச் சாம்பியனாக விளையாடும் பாகிஸ்தான் தங்களது முதல் போட்டியில் சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் தோற்று ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை சந்தித்தது.
அதனால் செமி ஃபைனல் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலையில் பாகிஸ்தான் விளையாட உள்ளது. மறுபுறம் தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அசத்தியது. எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் இந்தியா இந்தப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து 2017 ஃபைனல் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
இந்நிலையில் தரமான இந்திய அணியை தற்போதைய பாகிஸ்தான் அணி நெருங்கும் அளவுக்கு கூட இல்லை என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் அணியில் வெறும் ஒரு ஸ்பின்னர் மட்டுமே இருப்பதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் அவருடைய பேட்டிங் பலவீனமாக இருப்பதாகவும் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக இம்முறை பாகிஸ்தான் அணியை கண்டிப்பாக இந்தியா தோற்கடிக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியாவை நெருங்கும் அளவுக்கு கூட பாகிஸ்தான் தற்போது இல்லை. சமீப காலங்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா டாமினேட் செய்துள்ளது. இம்முறை பாகிஸ்தான் அணி முன்பை விட பலவீனமாக இருப்பதாக தெரிகிறது”
“அதற்காக இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஜொலிக்காது என்றும் சொல்ல முடியாது. தரத்தின் அடிப்படையில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டிகள் கொஞ்சம் சிறப்பாக இருக்கும். ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களை நீங்கள் கேட்டால் அவர்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டி மிகச் சிறந்தது என்று சொல்வார்கள்”
இதையும் படிங்க: பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் மாபெரும் உலக சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ
“எனவே இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான அனல் எப்போதும் இருக்கும். துபாயில் நீங்கள் அசத்துவதற்கு ஸ்பின்னர்கள் தேவை. ஆனால் பாகிஸ்தான் ஒரு ஸ்பின்னரை மட்டுமே வைத்துள்ளது. அப்ரார் அகமது மட்டுமே இருப்பதால் குஷ்தில் ஷா அல்லது சல்மான் ஆகா கொஞ்சம் ஓவர்களை வீச வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். ஆனால் அவர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை தடுமாற வைப்பதற்கு போதுமானவர்களாக இல்லை. வேகப்பந்து வீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது” என்று கூறினார்.