
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 2 தொடர்களையும் இந்தியா வென்று சரித்திரம் படைத்தது.
மறுபுறம் கடந்த இரண்டு தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை இந்தியாவை தோற்கடிக்க ஆஸ்திரேலியா இப்போதே தயாராகி வருகிறது. இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகிய தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இம்முறை தயாராக இருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். எனவே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களிடம் சிரமத்தை சந்திப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்தியாவின் வெற்றி ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜெய்ஸ்வால், கில் போன்ற பேட்ஸ்மேன்களின் கையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஏனெனில் இந்தியாவின் பவுலிங் அபாரமாக இருப்பதாக தெரிவிக்கும் சஞ்சய் மஞ்ரேக்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு கொஞ்சம் முன்னதாகவே செல்ல வேண்டும். இம்முறை இந்தியா சிறந்த பவுலிங் அட்டாக்கை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்”
“ஏனெனில் பும்ரா தனது கேரியரின் உச்சத்தில் இருக்கிறார். ஷமி கம்பேக் கொடுக்கத் தயாராகி வருகிறார். முகமது சிராஜ் திறமையை மறந்து விடாதீர்கள். அவர்களுடன் ஆகாஷ் தீப் இருக்கிறார். எனவே வேகப்பந்து வீச்சு இந்திய அணிக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்களால் ஆஸ்திரேலியர்கள் கொஞ்சம் கடினத்தை சந்திப்பார்கள் என்று நினைக்கிறேன்”
“ஆனால் இந்தியா நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்கள் பாரத்தை கண்டிப்பாக சுமக்க வேண்டும். இது ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு பெரிய சோதனையாக இருக்கும். ஒருவேளை அதை கடந்து இந்தியா வந்தால் ஆஸ்திரேலியாவில் மற்றும் ஒரு தொடரை வெல்லலாம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: இராணி கோப்பை 2024 : ருதுராஜ் கேப்டன், தமிழக வீரருக்கு இடம்.. சர்பராஸ், ஜுரேல் நிபந்தனை தேர்வு
மொத்தத்தில் ஆஸ்திரேலியாவில் 20 விக்கெட்டுகளை எடுக்கும் அளவுக்கு இந்தியாவின் பவுலிங் சிறப்பாக இருப்பதாக சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். அதே போல பட் கமின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட் ஆகியோரால் ஆஸ்திரேலியாவும் வலுவான வேகப்பந்து வீச்சை கொண்டுள்ளது. எனவே அவர்களை திறம்பட எதிர்கொண்டு பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்தால் ஆஸ்திரேலியாவில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறும் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.