இந்தியாவில் 2024 துலீப் கோப்பை உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்று முடித்தது. இதைத் தொடர்ந்து இராணி கோப்பை 2024 தொடருக்கான விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பொதுவாக இராணிக் கோப்பையில் ரஞ்சிக் கோப்பை சாம்பியன் மற்றும் இந்தியாவின் மற்ற சிறந்த வீரர்கள் அடங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் மோதுவது வழக்கமாகும்.
அந்த வரிசையில் இம்முறை அஜிங்க்ய ரஹானே தலைமையிலான மும்பை அணி ரஞ்சிக் கோப்பையின் நடப்புச் சாம்பியனாக இருக்கிறது. எனவே அந்த அணியுடன் மோதும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்:
அந்த அணியில் இளம் தமிழக வீரர் சாய் சுதர்சன் தேர்வாகி அசத்தியுள்ளார். குறிப்பாக 2024 துலீப் கோப்பையின் கடைசி ரவுண்ட் போட்டியில் சதமடித்து 111 ரன்கள் குவித்த அவர் தன்னுடைய அணியின் வெற்றிக்கு போராடினார். அதே போல துருவ் ஜுரேல், சர்பராஸ் கான் (மும்பை), யாஷ் தயாள் ஆகியோரும் அந்த அணியில் தேர்வாகியுள்ளனர். இருப்பினும் அவர்கள் தற்போது நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலும் தேர்வாகியுள்ளனர்.
அதனால் 2வது வங்கதேச டெஸ்ட் போட்டியில் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லையெனில் இராணி கோப்பையில் விளையாடுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மற்ற படி துலீப் கோப்பையில் சதமடித்து அசத்திய இசான் கிசான் இராணி கோப்பையிலும் தேர்வாகியுள்ளார். அவருடன் அபிமன்யு ஈஸ்வரன், படிக்கல், முகேஷ் குமார், கலில் அகமது, ராகுல் சஹார் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.
இராணி கோப்பை:
இதைத் தொடர்ந்து மும்பை மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் மோதும் இராணி கோப்பை போட்டி வரும் அக்டோபர் 1 முதல் 5 வரை நடைபெற உள்ளது. அப்போட்டி லக்னோவில் இருக்கும் அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும்.
இதையும் படிங்க: ஜெய்ஸ்வால் அப்பாவி கிடையாது.. கேஎல் ராகுலின் அந்த வாய்ப்பையும் பறிக்க வந்துட்டாரு.. அஸ்வின் ஓப்பன்டாக்
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், தேவ்தூத் படிக்கல், சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் (கீப்பர்), இஷான் கிசான் (கீப்பர்), மாணவ் சுதர், சரன்ஸ் ஜெயின், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார், யாஸ் தயாள், ரிக்கி புய், சஸ்வந்த் ராவத், கலீல் அஹ்மத், ராகுல் சஹர்.



