அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டிலும் சான்ஸ் கொடுக்கலாம்.. இளம் இந்திய வீரருக்கு சஞ்சய் மஞ்ரேக்கர் ஆதரவு

Sanjay Manjrekar 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

அந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சர்ஃபராஸ் கான் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 50 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிவேகமான அரை சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற பாண்டியாவின் சாதனையை சமன் செய்தார். இருப்பினும் துரதிஷ்டவசமாக 62 ரன்களில் அவுட்டான அவர் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் அதிரடியாக விளையாடி 68* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

ஒன்டே சான்ஸ்:
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியின் 2 இன்னிங்ஸிலும் 2 அரை சதங்கள் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தத் துவங்கியுள்ள சர்பராஸ் கான் ஒருநாள் போட்டிகளிலும் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடும் திறமையை கொண்டிருப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

எனவே அவருக்கு ஒருநாள் போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “50 ஓவர் போட்டிகளில் மிடில் ஆர்டரில் அசத்தக்கூடிய நல்ல பேட்ஸ்மேனை இந்தியா கண்டறிந்துள்ளதாக நான் நினைக்கிறேன். குறிப்பாக போட்டியின் மிடில் ஸ்டேஜில் உள்வட்டத்திற்குள் 5 ஃபீல்டர்கள் நிற்கும் போது சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவர் சர்பாராஸ் கான்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடிய சர்பராஸ் கான் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவதற்கே நான்கு வருடங்கள் தேவைப்பட்டது. மேலும் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 46 போட்டிகளில் 4042 ரன்களை 70.91 என்ற அபாரமான சராசரியில் எடுத்துள்ள காரணத்தாலேயே தற்போது இந்தியாவுக்காகவும் அறிமுகமாகியுள்ளார்.

இதையும் படிங்க: 2 பக்கமும் தொல்லை.. போட்டியை லைவா பாக்காம போய்ட்டேன்.. ராஜ்கோட் வெற்றி பற்றி சச்சின் கருத்து

ஆனால் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் இதுவரை 9 போட்டிகளில் 629 ரன்களை 34.94 என்ற சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார். எனவே முதன்மை வீரர்கள் இருக்கும் போது அவருக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் மிடில் ஓவர்களில் அசத்தும் திறமை கொண்டுள்ள சர்பராஸ் தான் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement