
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை சமன் செய்த இந்தியா 2வது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 27 வருடங்கள் கழித்து இலங்கைக்கு எதிராக ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய நழுவ விட்டது. அந்த 2 போட்டிகளிலுமே மிகவும் குறைந்த இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்தார்.
ஆனால் எதிர்புறம் விராட் கோலி உள்ளிட்ட இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. இந்நிலையில் சிவம் துபே இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருப்பார். ஆனால் ஒருநாள் அணிக்கு செட்டாக மாட்டார் என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஃபீல்டிங்கில் சுமாராக செயல்படும் சிவம் துபே கொஞ்சம் நிதானமாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்டிங்கிலும் தொடர்ந்து அசத்துவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.
சொதப்பும் துபே:
அதற்கு பதிலாக கடந்த வாரம் இலங்கை மண்ணில் டி20 தொடரை கேப்டனாக வென்ற சூரியகுமார் விளையாடியிருக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இதற்கான காரணம் பற்றி பேசியது பின்வருமாறு. “சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் இந்தியா தங்களுடைய திட்டத்தை மீண்டும் சிந்திக்க வேண்டும். அதற்காக சூரியகுமார் யாதவ் அணியில் இருக்கலாம்”
“ஏனெனில் அவரை விட சிவம் துபே பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் சிறந்தவர் என்று நான் நினைக்கவில்லை. அவர் எப்படி ஒருநாள் அணிக்குள் வந்தார் என்பதும் எனக்குத் தெரியவில்லை. அவருடைய உள்ளூர் விளையாட்டின் புள்ளி விவரங்கள் எனக்குத் தெரியாது. ஒருநாள் கிரிக்கெட்டில் சூரியகுமாரின் புள்ளிவிவரங்கள் நன்றாக இல்லை தான். ஆனால் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் சமீபத்தில் இலங்கை மண்ணில் ரன்கள் அடித்தார்”
“அற்புதமான ஃபீல்டரான அவருடைய கேப்டன்ஷிப் கேரியரும் ஒளிமயமாக துவங்கியுள்ளது. ஆனால் ஃபீல்டிங் என்று வரும் போது சிவம் துபே தாமதமாக செயல்படுகிறார். இந்திய அணி தங்களுடைய பேட்டிங்கில் புத்திசாலித்தனமான ஃபிட்டான வீரர்களை தான் விரும்புகிறது. ஆனால் ஓரிரு முறை மட்டுமே 40 – 50 ரன்கள் அடிக்கும் துபே தொடர்ந்து அசத்துவதில்லை”
இதையும் படிங்க: என்னா மனுஷன்யா.. ராகுல் ட்ராவிட்டிடம் கோப்பையை வாங்கி 2024 டி20 உ.கோ.. அஸ்வின் செய்த நெகிழ்ச்சியான செயல்
“ஃபிட்டாகவும் இல்லாத அவர் பேட்டிங்கில் தொடர்ந்து அசத்துவதில்லை” என்று கூறினார். அவர் கூறுவது போல 2019இல் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான சிவம் துபே சுமாராக செயல்பட்டதால் அப்போதே கழற்றி விடப்பட்டார். இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பையில் ஓரளவு அசத்தியதால் 5 வருடங்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது வாய்ப்பு பெற்றுள்ள துபே இத்தொடரில் 25, 0 ரன்களில் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.