உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய அழுத்தத்துடன் களமிறங்க உள்ளது. இருப்பினும் ஜஸ்பிரித் பும்ரா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் என 3 முக்கிய வீரர்கள் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விளையாடாமல் இருப்பது இந்தியாவுக்கு பின்னடைவாக இருந்து வருகிறது.
அதை விட உலகக்கோப்பை துவங்குவதற்கு இன்னும் 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் முதன்மையான அணியை களமிறக்காமல் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் சோதனை என்ற பெயரில் ரோஹித் சர்மாவை 12 வருடங்கள் கழித்து 7வது இடத்தில் களமிறக்கி பேட்டிங் வரிசையில் தாறுமாறான மாற்றங்களை செய்த இந்தியாவுக்கு தோல்வி பரிசாக கிடைத்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் காலம் காலமாக தரமான சுழல் பந்து வீச்சை அபாரமாக எதிர்கொள்ளும் இந்திய பேட்ஸ்மேன்களின் திறமை தற்போது காணாமல் போய்விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார்.
அனுபவம் தேவை:
எனவே சுழலுக்கு சாதகமான மைதானங்களை கொண்ட தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட அந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டுமென தெரிவிக்கும் அவர் இந்திய அணிக்கு அழுத்தமான போட்டியில் அசத்துவதற்கு சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களை விட சிகர் தவான் போன்ற அனுபவம் மிகுந்தவர்களே தேவை என்றும் கூறியுள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் இதற்கு முன் விளையாடாத இளம் அணியை அனுப்பியிருக்க வேண்டும் என்று கூறும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.
“சமீப கால வரலாற்றில் இந்தியா ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளவில்லை. ஆனால் பொதுவாகவே அவர்கள் காலம் காலமாக ஸ்பின்னர்களை மிகச் சிறப்பாக எதிர்கொள்வார்கள். இருப்பினும் தற்போது அவர்களிடம் அந்த கட்டுப்பாடு இல்லை. இதை அவர்கள் சரி செய்ய வேண்டும். 2வதாக அவர்கள் ஒவ்வொரு தொடரிலும் நிறைய மாற்றங்களை செய்கிறார்கள். எனவே உலகக்கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் நீங்கள் உங்களுடைய 15 பேரை அறிந்து அவர்களுக்கான வேலையை உணர வேண்டும்”
“மேலும் நீங்கள் ஒருவருக்கு ஓய்வு கொடுக்க விரும்பினால் வித்தியாசமான கலவையை முயற்சித்து ஏ அணியை அனுப்பலாம். அதனால் உலக கோப்பையில் விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் நீங்கள் ஓய்வு கொடுக்கலாம். மாறாக விளையாடும் 11 பேர் அணியில் பாதி பேருக்கு ஓய்வு கொடுத்து பாதி பேரை விளையாட வைப்பது சரியான முடிவாக இருக்காது. குறிப்பாக சூரியகுமார் யாதவ், இசான் கிசான், சுப்மன் கில் ஆகியோர் புதியவர்கள் கிடையாது. அவர்கள் ஒருநாள் தொடரில் இரட்டை சதங்களும் ஐபிஎல் தொடரில் சதமும் அடித்துள்ளனர்”
“மேலும் இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் பிரச்சனை நிலவுகிறது. அது போன்ற சூழ்நிலையில் நீங்கள் ஐபிஎல் தொடரில் அசத்தி டெஸ்ட் போட்டிகளில் கம்பேக் கொடுத்த ரகானே மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை முயற்சிக்கலாம். குறிப்பாக தவானை தவிர்த்து தற்போதைய டாப் ஆர்டரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எனவே கில் அல்லது தவான் ஆகியோர் ரோகித்துடன் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும்”
இதையும் படிங்க:நின்னா நடந்தா காலரை தூக்குனா குத்தமா? நான் இப்டி தான் இருப்பேன் – ரசிகர்களுக்கு ரியன் பராக் மாஸ் பதிலடி
“பொதுவாக உலகக் கோப்பையில் உங்களுக்கு அனுபவம் தேவை. எனவே 5 அல்லது 6வது இடத்தில் கேஎல் ராகுல் அல்லது ரகானே விளையாட வேண்டும். ஏனெனில் அழுத்தம் ஏற்படும் போது இளம் கிரிக்கெட் வீரர்கள் தடுமாறி விடுவார்கள். எனவே அழுத்தத்தை அனுபவத்தால் மட்டுமே சமாளிக்க முடியும்” என்று கூறினார். இருப்பினும் தவான், ரகானே ஆகியோர் உத்தேச அணியில் கூட இல்லாத நிலைமையில் டாப் 6 பேட்ஸ்மேன்களில் ரோஹித், கில், விராட், ஸ்ரேயாஸ், ராகுல், பாண்டியா என அனைவருமே வலது கை வீரர்களாக இருப்பது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்த காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.