நின்னா நடந்தா காலரை தூக்குனா குத்தமா? நான் இப்டி தான் இருப்பேன் – ரசிகர்களுக்கு ரியன் பராக் மாஸ் பதிலடி

Riyan Parag.jpeg
- Advertisement -

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ரியான் பராக் உள்ளூர் கிரிக்கெட்டில் ஓரளவு அசத்தியதால் கடந்த 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அதில் ஹைதராபாத்துக்கு எதிரான ஒரு போட்டியில் மிகவும் இளம் வயதில் அரை சதமடித்த வீரராக சாதனை படைத்து வெற்றி பெற வைத்த அவரிடம் ஏதோ ஒரு திறமை இருப்பதாக கருதிய ராஜஸ்தான் நிர்வாகம் தொடர்ந்து தக்க வைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத அவர் 2020, 2021 சீசன்களில் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மீண்டும் 3.80 கோடி பெரிய தொகைக்கு தக்க வைக்கப்பட்டார்.

இருப்பினும் அந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தாத அவர் இதுவரை 5 ஐபிஎல் தொடர்களில் மொத்தமாக 44 இன்னிங்ஸில் வெறும் 600 ரன்களை 16.22 என்ற படுமோசமான சராசரியிலும் 123.97 என்ற சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்துள்ளார். ஆனால் சமூக வலைதளங்களில் ரோகித் சர்மா, விராட் கோலி சாதித்தது போல பேசுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர் இந்த சீசனில் ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் அடிப்பேன் என்று அதீத தன்னம்பிக்கையுடன் ட்விட்டரில் பதிவிட்டு களத்தில் அதிமேதாவியை போல் நடந்து கொள்வது ரசிகர்களுக்கு பிடிக்காததாக இருந்து வருகிறது.

- Advertisement -

ரசிகர்களுக்கு பதிலடி:
குறிப்பாக 2022 சீசனில் தரையில் உரசிய கேட்ச் பிடித்ததை வழங்காததால் நடுவர்களை கலாய்த்தது அதற்காக இளம் வயதில் அவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று அறிவுரை வழங்கிய ஜாம்பவான் மேத்தியூ ஹெய்டனை ட்விட்டரில் மறைமுகமாக கிண்டலடித்தது போன்ற அவருடைய சேட்டைகள் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் முதலில் செயலில் காட்டி விட்டு பின்னர் வாயில் பேசுங்கள் என்று அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து ட்ரெண்டிங் செய்வது வாடிக்கையாக வருகிறது.

இந்நிலையில் 2023 தியோதர் கோப்பையில் அதிக ரன்கள் (354) அடித்த வீரராக சாதனை படைத்து 11 விக்கெட்டுகள் எடுத்து தொடர்நாயகன் விருது வென்ற ரியன் பராக் தன் மீதான கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை வெறுப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக நின்றால் நடந்தால் காலரை தூக்கி விட்டால் அனைவரும் குற்றம் கண்டுபிடிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அனைவரும் ஏன் என்னை வெறுக்கிறார்கள் என்பதற்கான ஐடியா என்னிடம் இல்லை. இங்கே சிலர் எப்படி கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று எழுதப்படாத விதிமுறைகளை வைத்துள்ளனர்”

- Advertisement -

“அதாவது உங்களுடைய மேல்சட்டை கால் சட்டைக்குள் டக் செய்திருக்க வேண்டும், சட்டையின் காலர் கீழே இருக்க வேண்டும், அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும், யாரையும் ஸ்லெட்ஜிங் செய்யக்கூடாது என்பதை அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நான் அவை அனைத்திற்கும் முற்றிலும் எதிராக இருக்கக்கூடியவன். குறிப்பாக நான் வாயில் சுயிங்கம் மெல்லுவது அனைவரிடமும் பிரச்சனையை ஏற்படுகிறது. அதாவது என்னுடைய காலர் உயர்ந்திருந்தால் அது யாருக்கும் பிடிப்பதில்லை. நான் கேட்ச் பிடித்த பின் அதை கொண்டாடினால் யாரும் விரும்புவதில்லை”

“மேலும் சாதாரண நாட்களில் நான் ஆன்லைன் கேம்ஸ் மற்றும் கோல்ஃப் விளையாடுவதை யாரும் விரும்பவில்லை. தற்போது நான் தியோதார் கோப்பையில் ஓரளவு அசத்தியதால் அனைவரும் சிறப்பாக செயல்பட்டார் என்று பாராட்டுகின்றனர். ஆனால் நாளை ஒரு போட்டியில் சொதப்பினால் இதே மக்கள் என்னை மீண்டும் விமர்சிப்பார்கள். எனவே இது போன்ற முகம் தெரியாத கிண்டல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் யாருமே முகத்திற்கு நேராக வந்து என்னிடம் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை சொல்லப் போவதில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க:IND vs WI : 1 முதல் 5 வரை எங்கயும் 30 சராசரிய தாண்டல, உங்களுக்கு அது தான் சரியான இடம் – சாம்சன் பற்றி ஆகாஷ் சோப்ரா பேட்டி

இருப்பினும் முதலில் நல்ல நன்னடத்தை மற்றும் ஒழுக்கம் இருந்தால் தான் எந்த துறையிலும் சாதிக்க முடியும் என்று சொல்வார்கள். மேலும் ஜாம்பவான்கள் சச்சின் முதல் தோனி வரை அனைவருமே தன்னடக்கமாக செயல்பட்ட காரணத்தாலேயே இன்று நாயகர்களாக போற்றப்படும் நிலையில் எதுவுமே சாதிக்காமல் நன்னடத்தையுடன் நடந்து கொள்ள மாட்டேன் என்று இவர் இப்படி பேசுவது ரசிகர்களிடம் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

Advertisement