இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் உலகக் கிரிக்கெட்டின் சாம்பியனை நிர்ணயிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கோலாகலமாக துவங்க உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான கிரிக்கெட் அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா கோப்பையை வெல்வதற்கு பேட்டிங் துறையில் இரு துருவங்களாக போற்றப்படும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படுவது அவசியமாகும்.
ஏனெனில் கடந்த 10 வருடங்களில் அதிக ரன்களையும் சதங்களையும் அடித்து ஏராளமான சாதனைகளை படைத்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் இவர்கள் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக போற்றப்படுகிறார்கள். இருப்பினும் நவீன கிரிக்கெட்டின் நாயகன்களாக கொண்டாடப்படும் இவர்கள் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சொதப்புவதே கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் தோல்விக்கு முதன்மை காரணமாக இருந்து வருகிறது. அதில் விராட் கோலி கூட 2013 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் அதிக ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றி 2014, 2016 டி20 உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு போராடியுள்ளார்.
சொதப்பல் ஹிட்மேன்:
ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை அடித்து ஏராளமான சாதனைகளை படைத்து ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோகித் சர்மா 50 ஓவர் நாக் அவுட் போட்டிகளில் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டதில்லை. குறிப்பாக 2015 உலகக்கோப்பை செமி ஃபைனல், 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் சொதப்பிய அவர் 2019 உலகக்கோப்பையில் லீக் சுற்றில் அடித்து நொறுக்கி 648 ரன்கள் எடுத்தும் நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் வெறும் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
அதை விட கேப்டனாக பொறுப்பேற்ற பின் 2022 டி20 உலக கோப்பை செமி ஃபைனலிலும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் அரை சதம் கூட அடிக்காத அவர் இந்தியாவின் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தார் என்றே சொல்லலாம். இந்நிலையில் சாதாரண போட்டிகளில் அடித்து நொறுக்கி ஹிட்மேன் என்று பெயரெடுத்துள்ள ரோகித் சர்மா அழுத்தமான ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி இந்தியாவுக்கு ஏமாற்றத்தை கொடுத்து வருவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் விமர்சித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே ரோஹித், கில் இருக்கும் போது வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் இசான் கிசான் தொடக்க வீரராக களமிறக்கி சோதிக்கப்பட்டது வீண் முயற்சி என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் விவரித்து பேசியது பின்வருமாறு. “இந்தியாவின் சோதனைகள் குழப்பமாக இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் ஒரு போட்டியில் 200 ரன்கள் அடித்த ஒருவரை (இஷான்) அடுத்த போட்டியிலேயே நீக்கிய நீங்கள் இந்த சோதனை முயற்சியில் அவர் 1 இன்னிங்ஸில் 1000 ரன்கள் அடித்தாலும் என்ன முடிவுக்கு வரப் போகிறீர்கள்? அதனால் அது போன்ற வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டாலும் அந்த வீரருக்கு திருப்தியை கிடைக்காது”
“மேலும் இத்தனை சோதனைகள் நிகழ்த்தியும் இறுதியில் உங்களுடைய 2வது தேர்வு என்ன என்பது தெரியாமலேயே இருக்கிறது. ஏனெனில் இஷான் கிசான் இனியும் உங்களுடைய பெஞ்சில் அமர்ந்திருக்க போகும் வீரர் கிடையாது. 2வதாக ரோகித் சர்மா மிகப்பெரிய வீரர் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் அவரை போன்ற சில வீரர்கள் அங்கே நீண்ட காலமாக இருந்து வருகிறார்கள்”
இதையும் படிங்க:கைவிரித்த கொல்கத்தா, ஹேர் ட்ரையர் வரிசையில் காற்றில் பறக்கும் இந்தியாவின் மானம் – ஜெய் ஷா’வை விளாசும் ரசிகர்கள்
“ஆனாலும் அழுத்தம் உருவாகும் போது அவர்களால் வெற்றிகரமாக செயல்பட முடிவதில்லை. குறிப்பாக நாக் அவுட் போட்டிகளில் அசத்த முடிவதில்லை. இந்த விஷயத்தில் இந்தியாவும் அவர்களுடைய முக்கிய வீரர்களும் உழைக்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக கேப்டனாக 2 ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்த ரோகித் சர்மா இம்முறை சொந்த மண்ணில் 2023 கோப்பையை வெல்லத்த தவறினால் கேப்டன்ஷிப் பதவியை இழக்கும் சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.