51/4 டூ 139/4.. சம்மி மேஜிக்.. தாஹிர் அணியை வீழ்த்தி டு பிளேஸிஸ் அணி 11 வருட கனவை நிஜமாக்கியது எப்படி?

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2024 கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற்றது. அதில் லீக் மற்றும் பிளே ஆஃப் சுற்றில் வெற்றி கண்ட செயின்ட் லூசியா கிங்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய கயானா அணி 20 ஓவரில் மிகவும் போராடி 138-8 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு குர்பாஸ் 0, மொய்ன் அலி 14, ஷாய் ஹோப் 22, சிம்ரோன் ஹெட்மேயர் 11, கீமோ பால் 12 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். இருப்பினும் கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய ட்வயன் பிரிட்டோரியஸ் 25 (12), ரோமாரியா செபார்ட் 19* (9) ரன்கள் அடித்து ஓரளவு காப்பாற்றினார்.

- Advertisement -

டேரன் சம்மி மேஜிக் மெசேஜ்:

செயின்ட் லூசியா அணிக்கு அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் பின் 139 ரன்கள் துரத்திய செயின்ட் லூசியா அணிக்கும் கேப்டன் டு பிளேஸிஸ் 21 (21), ஜான்சன் சார்லஸ் 7 (10), அக்கீம் அகஸ்தே 13 (15), டிம் செய்பர்ட் 3 (10) ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அப்படி மிகவும் மெதுவாக விளையாடிய அந்த அணி முதல் 10 ஓவரில் 51-4 ரன்கள் மட்டுமே எடுத்தது. அத்துடன் 5 – 15 வரையிலான 10 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.

ஆனால் அப்போது இடைவெளியில் களத்திற்கு வந்த செயின்ட் லூசியா பயிற்சியாளர் டேரன் சம்மி தம்முடைய வீரர்களுக்கு ஏதோ மெசேஜ் கொடுத்தார். அதைப் பின்பற்றிய ராஸ்டன் சேஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் திடீரென அதிரடியாக விளையாடினர். அந்த வகையில் கடைசிக்கட்ட ஓவர்களில் எதிரணி பவுலர்களை பந்தாடிய அந்த ஜோடி 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 18.1 ஓவரிலேயே லூசியாவை 139/4 எடுக்க வைத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது.

- Advertisement -

செயின்ட் லூசியா வெற்றி:

அதில் ஆரோன் ஜோன்ஸ் 48* (31) ரன்களும் ராஸ்டன் சேஸ் 39* (22) ரன்களும் விளாசி வெற்றி பெற வைத்தனர். அந்த வகையில் 2012, 2016 டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கேப்டனாக வென்ற டேரன் சம்மி இப்போட்டியில் பயிற்சியாளராக மேஜிக் நிகழ்த்தி கோப்பையை வெல்ல உதவினார். அவருடைய உதவியுடன் செயின்ட் லூசியா கிங்ஸ் தொடர் துவங்கப்பட்ட 11 வருடங்களில் முதல் முறையாக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

இதையும் படிங்க: அவங்களால தலைவலி தான்.. ஜெய்ச்சாலும் திருப்தியில்ல அடுத்த போட்டியில் முன்னேறனும்.. கேப்டன் சூரியகுமார் பேட்டி

குறிப்பாக 40 வயதாகும் டு பிளேஸிஸ் தலைமையில் அந்த அணி கோப்பையை வென்றது ஆர்சிபி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதனால் 2025இல் அவர் தலைமையில் கோப்பையை வெல்வோம் என்று ஆர்சிபி ரசிகர்கள் நம்பிக்கை பெற்றுள்ளனர். அதே போல ஐபிஎல் தொடரில் காலம் காலமாக தோல்வியை மட்டுமே சந்தித்த பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா இந்தத் தொடரில் தம்முடைய கிளை அணியின் வாயிலாக முதல் முறையாக கோப்பையை வென்றார். மறுபுறம் இம்ரான் தாகிர் தலைமையிலான கயானா ஏமாற்ற தோல்வியை சந்தித்தது.

Advertisement