வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. குவாலியரில் அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசத்தை 127 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. அதிகபட்சமாக கேப்டன் சான்டோ 27, மெஹதி ஹசன் 35* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து சேசிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் 29, சஞ்சு சாம்சன் 29, ஹர்திக் பாண்டியா 39* ரன்கள் எடுத்தனர். அதனால் 11.5 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா எளிதாக வென்று 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக டெஸ்ட் தொடரை போலவே இந்தியா டி20 தொடரிலும் வங்கதேசத்தை வீழ்த்தத் துவங்கியுள்ளது.
அசத்திய அறிமுகங்கள்:
இந்நிலையில் இப்போட்டியில் அறிமுகமான நிதிஷ் ரெட்டி மற்றும் மயங் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக கேப்டன் சூரியகுமார் பாராட்டியுள்ளார். அந்த இருவரைப் போல தற்போதைய அணியில் நிறைய வீரர்கள் பவுலிங் செய்யும் திறமையை பெற்றுள்ளதால் யாரை பயன்படுத்துவது என்ற தலைவலி தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சூரியகுமார் கலகலப்பாக கூறியுள்ளார்.
மேலும் முதல் போட்டியில் வென்றாலும் இன்னும் முன்னேற வேண்டிய விஷயங்கள் இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாங்கள் எங்களுடைய திறனுக்கு ஆதரவு கொடுக்க முயற்சித்தோம். அணி மீட்டிங்கில் பேசியதை களத்தில் நாங்கள் செய்தோம். இந்த புதிய மைதானத்தில் முதல் முறையாக விளையாடினோம். அந்த வாய்ப்பில் எங்களுடைய வீரர்கள் பேட்டிங் செய்து சிறப்பாக விளையாடி தங்களுடைய கேரக்டரை காண்பித்தார்கள்”
முன்னேற்றம் தேவை:
“அறிமுக வீரர்கள் சுவாரசியத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாடினார்கள். அவர்களை அடுத்த 2 போட்டிகளிலும் பார்க்க ஆவலுடன் உள்ளேன். நீங்கள் களத்தில் இருக்கும் போது எக்ஸ்ட்ரா பவுலிங் ஆப்ஷன்கள் இருப்பது உங்களுக்கு தலைவலியை கொடுக்கக்கூடிய நல்ல விஷயமாகும். நீங்கள் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் போது ஏதாவது புதியவற்றை கற்றுக்கொள்வீர்கள்”
இதையும் படிங்க: காற்று பலமா அடிச்சுது.. இந்த 2 டெக்னிக் மாற்றங்களை செஞ்சேன்.. வங்கதேச வீழ்த்திய ஆட்டநாயகன் அர்ஷ்தீப் பேட்டி
“இந்தப் போட்டியிலும் நாங்கள் முன்னேற வேண்டிய சில இடங்கள் இருந்தது. அதைப்பற்றி அடுத்த போட்டிக்கு முன்பாக நாங்கள் உட்கார்ந்து பேசி முன்னேற முயற்சிப்போம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டி வரும் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறுகிறது. அப்போட்டி தலைநகர் டெல்லியில் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



