
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தியது. அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் இம்முறை மிகப் பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ள பெங்களூரு அணியை வெகு எளிதாக வீழ்த்திய அந்த அணிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 169 ரன்களை குவிக்க பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி வெறும் 17.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 170 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 73 ரன்கள் அடித்திருந்த வேளையில் தமிழக வீரரான சாய் சுதர்சன் 49 ரன்கள் குவித்து அசத்தினார். இந்த போட்டியில் 36 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 49 ரன்கள் குவித்திருந்தார்.
ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் அரைசதம் அடித்த அவர் நேற்று 49 ரன்களை அடித்தது அவரது மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மை வெளிக்காட்டியது. இந்நிலையில் இந்த 2025 ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான பேட்டிங்கிற்கு என்ன காரணம்? என்பது குறித்து சாய் சுதர்சன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
ஐபிஎல் தொடரில் இது எனது நான்காவது ஆண்டு. நான் கடந்த சில ஆண்டுகளாகவே கற்றுக் கொண்ட அனுபவத்தை வைத்து தற்போது நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். அதுமட்டும் இன்றி இந்த ஆண்டு நான் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ய எங்களது அணி வீரர்களுடன் இணைந்து நிறைய வலை பயிற்சியில் ஈடுபட்டதுதான் காரணம். ஏனெனில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் எங்களது அணியில் இருக்கும் வேளையில் அவர்களுக்கு எதிராக வலைப்பயிற்சியில் நான் நீண்ட நேரம் பேட்டிங் செய்கிறேன்.
இதையும் படிங்க : வதந்திகளை நம்ப வேண்டாம்.. அவர் நல்லா இருக்காரு.. விராட் கோலி குறித்த முக்கிய அப்டேட்டை கொடுத்த – ஆர்.சி.பி கோச்
அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு எதிராக நீண்ட நேரம் வலை பயிற்சியில் இருப்பது எனது பேட்டிங்கிற்கு நிறையவே உதவுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். அதையெல்லாம் வைத்து தான் தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வருகிறேன் என சாய் சுதர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.