9 போர்ஸ் 9 சிக்ஸ்.. திருப்பூரை சூறையாடி மாஸ் காட்டிய சாய் சுதர்சன்.. ஃபைனலுக்கு சென்ற கோவை

TNPL Q1
- Advertisement -

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அதில் ஜூலை 30ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு திண்டுக்கல்லில் குவாலிபயர் 1 பிளே ஆஃப் போட்டி நடைபெற்றது. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடித்த நடப்புச் சாம்பியன் கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய திருப்பூர் அணிக்கு துஷார் ரஹீஜா மற்றும் அமித் ஷாத்விக்கி ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். அந்த வகையில் 11 ஓவர்கள் வரை அட்டகாசமாக விளையாடி 105 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான துவக்கத்தை கொடுத்த அந்த ஜோடியில் ரகிஜா அரை சதமடித்து 55 (31) ரன்னில் அவுட்டானார்.

- Advertisement -

சாய் சுதர்சன் மிரட்டல்:
அடுத்த சில ஓவரில் மறுபுறம் 1 பவுண்டரி 7 சிக்ஸரை பறக்கவிட்ட சாத்விக் 67 (42) ரன்கள் விளாசி அவுட்டானார். அவர்களைத் தொடர்ந்து வந்த அனிருத் 21 (19) ரன்னில் அவுட்டானாலும் முகமது அலி அதிரடியாக 4* (23) ரன்களும் கேப்டன் சாய் கிஷோர் 8* (5) ரன்களும் அடித்தனர். அதனால் 20 ஓவரில் திருப்பூர் 200/3 ரன்கள் குவித்து அசத்தியது.

கோவை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் சாருக்கான், சுப்பிரமணியன் தலா 1 விக்கெட் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 201 ரன்களை துரத்திய கோவைக்கு முதல் பந்திலேயே விக்னேஷ் கோல்டன் டக் அவுட்டானார். ஆனால் அடுத்து நம்பிக்கை நட்சத்திரம் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடினார். இருப்பினும் எதிர்ப்புறம் தடுமாறிய சுஜய் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த சுரேஷ் குமாரும் 5 (7) ரன்னில் அவுட்டானதால் 53/3 என கோவை தடுமாறியது.

- Advertisement -

ஆனால் இந்த பக்கம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய சாய் சுதர்சன் திருப்பூர் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அடுத்ததாக வந்த முகிலேஷ் அதிரடியாக விளையாடி கை கொடுத்தார். அதை பயன்படுத்தி தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய சாய் சுதர்சன் அரை சதமடித்தார். நேரம் செல்ல செல்ல பட்டாசாக விளையாடிய அவர் சதமடித்து கோவையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.

அந்த வகையில் கடைசி வரை அவுட்டாகாமல் விளையாடிய சுதர்சன் 9 பவுண்டரி 9 சிக்ஸருடன் 123* (56) ரன்களை 219.54 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி மாஸ் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் 4வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முகிலேஷ் தம்முடைய பங்கிற்கு 48* (31) ரன்கள் குவித்தார். அதனால் 18.5 ஓவரிலேயே 201/3 ரன்கள் எடுத்த கோவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதையும் படிங்க: 30/4 என விழுந்து சுந்தர், பராக் அதிரடியில் தப்பிய இந்தியா.. சஞ்சு சாம்சன் மோசமான சாதனை.. கில் பரிதாபம்

அதன் காரணமாக ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் விளையாட முதல் அணியாக நடப்புச் சாம்பியன் கோவை தகுதி பெற்றது. இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். மறுபுறம் தோல்வியை சந்தித்த நடராஜன் இடம் வகிக்கும் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

Advertisement